

லக்னோ: ராஜஸ்தான் ராயஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளத்தின் தன்மையை சரியாகக் கணிக்கத் தவறிவிட்டதாகவும் இதுவே தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
போட்டிக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது: எந்த இடத்தில் தோல்வி அடைந்தோம் என்பதற்கான பதில்கள் எனக்கு தெரியவில்லை. எங்களின் பேட்டிங் எங்களைக் கைவிட்டுவிட்டது. ஒரு அணியாக, ஒரு குழுவாக நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். பதில்களை வெளியில் தேடுவதை விட, எங்களுக்குள்ளேயே தான் தேட வேண்டும். பேட்டிங் செய்யும் போது நாங்கள் இன்னும் சிறிது நேரம் எடுத்து நிதானமாக விளையாடி இருக்க வேண்டும்.
தோல்விக்கு சாக்குப்போக்குகள் சொல்ல விரும்பவில்லை. என்னையும் சேர்த்துச் சொல்கிறேன், ஆட்டத்தை நாங்கள் கடைசி வரை கொண்டு சென்றிருக்க வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக, இந்தத் தோல்விக்கு நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். பந்துவீச்சை பொறுத்தவரையில் நேர்மறையான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். நாங்கள் தலைகுனியாமல், எங்களுக்குள் விடை தேட வேண்டும். தொடரின் போக்கை மாற்றி அமைக்கும் திறன் எங்களிடம் உள்ளது. இவ்வாறு ரிஷப் பந்த் கூறினார்.