

பெங்களூரு: துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - வடக்கு மண்டலம் அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த வடக்கு மண்டலம் அணி 59.1 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரரான கம்ரான் இக்பால் 182 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசினார். கேப்டன் கன்ஹையா வதவான் 35, ஆயுஷ் டோசேஜா 23, அப்துல் சமத் 16, சனத் சங்க்வான் 10, அர்ஷ்தீப் சிங் 10 ரன்கள் சேர்த்தனர்.
தெற்கு மண்டலம் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளரான வித்வத் கவேரப்பா 4 விக்கெட்களை வீழ்த்தினார். நிதேஷ், தனய் தியாகராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து விளையாடிய தெற்கு மண்டலம் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்தது.
ரிக்கி புயி 5, ஷேக் ரஷீத் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். நாராயணன் ஜெகதீசன் 58 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், கேப்டன் திலக் வர்மா ஒரு ரன்னும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 155 ரன்கள் பின்தங்கியுள்ள தெற்கு மண்டல அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த மத்திய மண்டலம் அணி 80.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 88 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், ஆர்யன் ஜூயல் 113 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் எடுத்தனர்.
யாஷ் ரத்தோடு 27, ஹர்ஷ் துபே 27, அயன் பாண்டே 22, சரண்ஷ் ஜெயின் 13, கேப்டன் ரஜத் பட்டிதார் 12, அமன் மோஹதே 8, குணால் சந்தேலா 6, அர்ஷ்த் கான் 1 ரன்களில் நடையை கட்டினர். யாஷ் தாக்குர் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கிழக்கு மண்டலம் அணி தரப்பில் முகேஷ் குமார், அபிஜித் சர்க்கார் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முகமது ஷமி, முகமது கவுனைன் குரேஷி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 2-வது நாளான இன்று கிழக்கு மண்டலம் அணி பேட்டிங்கை தொடங்குகிறது.