

நெய்மர்
உலகக் கால்பந்தில் சில வீரர்கள் வென்ற கோப்பைகளால் வரலாற்றில் நிலைத்திருக்கிறார்கள். சிலர் முறியடித்த சாதனைகளால் நினைவுகூரப்படுகிறார்கள். ஆனால், மிகச் சிலரே தங்களது ஆட்டத்தின் அழகால், ஒரு தலைமுறையையே கால்பந்தை ரசிக்க வைக்கிறார்கள். அந்த அரிய பட்டியலில் தவிர்க்க முடியாத பெயர் நெய்மர் டா சில்வா சாண்டோஸ் ஜூனியர்.
மைதானத்தில் பந்தை காலில் வைத்த நொடியில் ரசிகர்களின் பார்வையை முழுவதுமாக தன் பக்கம் திருப்பும் திறன் அவருக்கே உரியது. எதிரணி வீரர்களை ஏமாற்றும் டிரிபிளிங், கணிக்க முடியாத பாஸ்கள், வளைத்து அடிக்கும் ஃப்ரீகிக்குகள், நொடிப்பொழுதில் போட்டியின் போக்கையே மாற்றும் மாயாஜாலம் என கால்பந்தை ஒரு விளையாட்டாக மட்டுமல்லாமல், ஒரு கலையாக மாற்றியவர் அவர்.
ஆனால், அந்த புன்னகையின் பின்னால் வறுமை, தியாகம், குடும்பத்தின் போராட்டம், முடிவில்லாத எதிர்பார்ப்புகள், கடுமையான விமர்சனங்கள் மற்றும் மீண்டும் மீண்டும் சோதித்த காயங்கள் நிறைந்ததாக அவரது வாழ்க்கைப் பயணம் அமைந்திருந்தது.
பிரேசிலின் தெருக்களில் தொடங்கிய கனவு
1992 பிப்ரவரி 5-ஆம் தேதி பிரேசிலின் மோகி தாஸ் குரூஸஸ் நகரில் நெய்மார் சாண்டோஸ் சீனியர் மற்றும் நடின் கோன்சால்வ்ஸ் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் நெய்மர் டா சில்வா சாண்டோஸ் ஜூனியர். சிறுவயதிலிருந்தே கால்பந்தையே தனது உலகமாக மாற்றிக்கொண்டார்.
பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தில் வளர்ந்த அவர், தெருக்களிலும் சிறிய ஃபுட்சால் மைதானங்களிலும் மணிக்கணக்கில் விளையாடினார். குறுகிய இடங்களில் பந்தை கட்டுப்படுத்துவது, சூழல்களை பொறுத்து வேகமான முடிவெடுப்பது, எதிரணி வீரர்களை நெருக்கடியான சூழலிலும் ஏமாற்றும் டிரிபிளிங் போன்ற திறன்கள் அங்கேதான் உருவானது.
முன்னாள் கால்பந்து வீரரான அவரது தந்தை நெய்மர் சாண்டோஸ் சீனியர், மகனின் திறமையை இளமையிலேயே கண்டறிந்தார். குடும்பத்தில் பொருளாதார சிரமங்கள் இருந்தபோதும், மகனின் கனவை கைவிடாமல் ஊக்கப்படுத்தினார். பின்னர் அவரது தொழில்முறை கால்பந்து பயணத்தில் வழிகாட்டியாகவும் மேலாளராகவும் இருந்தார்.
11 வயதில் சான்டோஸ் கிளப்பின் இளம் வீரர் அகாடமியில் இணைந்த நெய்மர், தனது அபாரமான திறமையால் விரைவிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 14 வயதில் ரியல் மாட்ரிட் அகாடமியில் சேரும் வாய்ப்பு கிடைத்தாலும், பிரேசிலிலேயே தொடர்ந்து வளர வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த முடிவே பின்னர் உலகக் கால்பந்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
2009-ல் 17 வயதில் சான்டோஸ் அணிக்காக அறிமுகமான நெய்மர், மிகக் குறுகிய காலத்திலேயே பிரேசிலின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். 2011-ல் சான்டோஸுக்கு கோபா லிபர்டடோரஸ் பட்டத்தை வென்று கொடுத்ததோடு, அதே ஆண்டில் பிளமெங்கோ அணிக்கு எதிராக அடித்த அற்புத தனிநபர் கோலுக்காக ஃபிபா புஸ்காஸ் விருது (FIFA Puskás Award)-ஐ வென்றார். 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து தென் அமெரிக்காவின் சிறந்த கால்பந்து வீரருக்கான சவுத் அமெரிக்கன் ஃபுட்பாலர் ஆப் தி இயர் (South American Footballer of the Year) விருதையும் வென்றார்.
அந்த காலகட்டத்திலேயே, ‘அடுத்த பீலே’ என்று உலக ஊடகங்கள் அவரை குறிப்பிடத் தொடங்கின. 2011 ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் சான்டோஸை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அவரது ஆட்டமும் உலகக் கால்பந்தின் கவனத்தை முழுமையாக ஈர்த்தது.
மிரள வைத்த எழுச்சியும், சாதனைகளும்
2013-ல் பார்சிலோனா அணியில் இணைந்த நெய்மர், லியோனல் மெஸ்ஸி மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகியோருடன் இணைந்து கால்பந்தின் மிகச் சிறந்த தாக்குதல் கூட்டணிகளில் ஒன்றான MSN (Messi, Suarez, Neymar) கூட்டணியை உருவாக்கினார்.
2014-15 ஆண்டுகளில் லா லிகா, கோபா டெல் ரே மற்றும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன்ஸ் லீக் ஆகிய மூன்று முக்கிய பட்டங்களையும் வென்ற பார்சிலோனாவின் வெற்றியில் அவரது பங்கு அளப்பரியது. குறிப்பாக, 2015 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் யுவென்டஸுக்கு எதிராக அவர் அடித்த கோல், பார்சிலோனாவின் டிரெபிள் வெற்றியை உறுதிப்படுத்தியது.
2017 - யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன்ஸ் லீக்கில் பிஎஸ்ஜி (PSG) அணிக்கு எதிராக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 6-1 மீள்வெற்றியில், கடைசி நிமிடங்களில் இரண்டு கோல்களையும் ஒரு அசிஸ்ட்டையும் வழங்கி, கால்பந்து வரலாற்றின் மிகப் பெரிய கம்பேக்குகளில் ஒன்றான ‘La Remontada’-வின் முக்கிய நாயகனாக நெய்மர் திகழ்ந்தார்.
அதே ஆண்டு, உலகையே அதிர்ச்சியடையச் செய்த €222 மில்லியன் (சுமார் 2,000 கோடி ரூபாய்) மதிப்பிலான உலகச் சாதனை மாற்றத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மெய்ன் (PSG) அணிக்குச் சென்றார். அந்த இடமாற்றம் இன்றுவரை உலகக் கால்பந்து வரலாற்றின் மிக அதிக தொகை செலுத்தப்பட்ட வீரர் இடமாற்றமாகவே உள்ளது.
உலகின் மிக விலையுயர்ந்த வீரராக மாறிய அவர், அங்கு பல லீக் 1 பட்டங்களை வென்றாலும், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பை மட்டும் அவருக்கு எட்டாத கனவாகவே இருந்தது. 2020-ல் PSG தனது வரலாற்றில் முதல் முறையாக யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை எட்டியபோது, பயர்ன் மியூனிக் அணியிடம் தோல்வியடைந்தது அவரது வாழ்க்கையின் மற்றொரு ஏமாற்றமாக அமைந்தது.
கைவிடாத மன உறுதி
நெய்மரின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, அவரது காயங்களை தவிர்க்க முடியாது. 2014 உலகக் கோப்பையில் கொலம்பியா அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஏற்பட்ட முதுகெலும்பு காயம், சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் அவரது கனவை நொறுக்கியது. அதன்பிறகு 2018 உலகக் கோப்பைக்கு முன்பாக பாதத்தில் ஏற்பட்ட காயம், 2022 உலகக் கோப்பையில் கணுக்கால் காயம் என ஒவ்வொரு உலகக் கோப்பையும் அவருக்கு ஒரு சோதனையாகவே அமைந்தது.
2022 உலகக் கோப்பையின் காலிறுதியில் குரோஷியா அணிக்கு எதிராக கூடுதல் நேரத்தில் அற்புதமான கோல் அடித்தபோதும், பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசில் வெளியேறியது அவரது வாழ்க்கையின் மிகவும் வேதனையான தருணங்களில் ஒன்றாக மாறியது.
2023 அக்டோபரில் தேசிய அணிக்காக விளையாடியபோது ஏற்பட்ட ஏசிஎல் (ACL) மற்றும் மெனிஸ்கஸ் காயம், அவரை நீண்ட காலம் மைதானத்திலிருந்து விலக வைத்தது. இருந்தாலும், ஒவ்வொரு முறையும் கடினமான பயிற்சிகளை கடந்து மீண்டும் திரும்பிய மன உறுதியே நெய்மரை தனித்துவப்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் காயங்களில் இருந்து மீண்டு வந்த அவரது போராட்டம், தோல்வியை ஏற்காமல் தொடர்ந்து முன்னேறும் அவரது மனஉறுதியை வெளிப்படுத்தியது.
கோப்பைகளைத் தாண்டிய மரபு
பிரேசில் தேசிய அணிக்காக நெய்மர் செய்த பங்களிப்பு அளப்பரியது. 2013 ஃபிபா கூட்டமைப்பு கோப்பை வெற்றி, 2016 ரியோ ஒலிம்பிக்கில் பிரேசிலின் முதல் ஒலிம்பிக் கால்பந்து தங்கப் பதக்கம், இறுதிப் போட்டியில் வெற்றியை உறுதி செய்த கடைசி பெனால்டியை அடித்த தருணம், மேலும் 2023-ல் பீலேவின் சாதனையை முறியடித்து பிரேசில் ஆண்கள் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரராக மாறியது ஆகியவை அவரது பெயரை வரலாற்றில் பதிந்த முக்கியமான சாதனைகளாக அமைந்தன.
ஆனால், நெய்மரை புள்ளிவிவரங்கள் மட்டுமே வரையறுக்கவில்லை. ‘ஜோகா பொனிட்டோ’ எனப்படும் பிரேசிலிய கால்பந்தின் அழகிய பாணியை நவீன கால்பந்திலும் உயிருடன் வைத்திருந்தவர் அவர். எலாஸ்டிகோ, ஸ்டெப்-ஓவர், ரெயின்போ ஃப்ளிக், நுட்பமான டிரிபிளிங், துல்லியமான பாஸ்கள், வளைத்து அடிக்கும் ஃப்ரீகிக்குகள் மட்டுமல்லாமல், இரு கால்களாலும் பந்தை கட்டுப்படுத்தும் திறன், சக வீரர்களுக்கு கோல் வாய்ப்புகளை உருவாக்கும் படைப்பாற்றல் ஆகியவை அவரை முழுமையான தாக்குதல் வீரராக மாற்றின.
மைதானத்திற்கு வெளியேயும், ‘இன்ஸ்டிடியூட்டோ ப்ராஜெட்டோ நெய்மார் ஜூனியர்’ என்ற அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான பொருளாதார வசதி குறைந்த குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூக ஆதரவை வழங்கி வருகிறார். ஒரு வீரரின் மகத்துவத்தை அவர் வென்ற கோப்பைகளால் மட்டும் அளவிட முடியாது. சில நேரங்களில், அவர் ஒரு தலைமுறையின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம்தான் அவரது உண்மையான மரபாக மாறுகிறது.
உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போயிருக்கலாம். பலமுறை காயங்கள் அவரது கனவுகளை உடைத்திருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளை கால்பந்தை நேசிக்க வைத்தது, ஒரு பந்துடன் என்னென்ன மாயங்கள் செய்ய முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது, வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் ஆட்டத்தின் அழகை ரசிக்கச் செய்தது நெய்மர்தான்.
நெய்மரின் வாழ்க்கை ஓர் உண்மையை நினைவூட்டுகிறது. ஒரு வீரரின் மகத்துவத்தை கோப்பைகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. சிலர் சாதனைகளை உருவாக்குவார்கள், சிலர் ஒரு தலைமுறையையே கால்பந்தைக் கனவு காண வைப்பார்கள். அந்த அரிய கலைஞர்களில் ஒருவர்தான் நெய்மர்.
அதனால்தான், உலகக் கால்பந்தின் வரலாற்றில் நெய்மர் ஒரு சாதாரண நட்சத்திரம் அல்ல. உலகக் கோப்பையில் கிரீடம் சூடாத இளவரசனாக இருந்தாலும், கால்பந்து ரசிகர்களின் இதயங்களில் என்றும் முடிசூடா மன்னனாகவே நினைவுகூரப்படுவார்.