

மவுண்ட் மவுங்கனி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரரான டேவன் கான்வே இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
மவுண்ட் மவுங்கனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது. டாம் லேதம் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவன் கான்வே 178 ரன்களும், ஜேக்கப் டஃபி 9 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 155 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த டேவன் கான்வே 367 பந்துகளில், 31 பவுண்டரிகளுடன் 227 ரன்கள் குவித்த நிலையில் ஜஸ்டின் கிரீவ்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
ஜேக்கப் டஃபி 17, கேன் வில்லியம்சன் 31, டேரில் மிட்செல் 11, டாம் பிளண்டல் 4, கிளென் பிலிப்ஸ் 29, ஸாக் ஃபவுல்க்ஸ் 1 ரன்னில் நடையை கட்டினர். தனது 5-வது அரை சதத்தை கடந்த ரச்சின் ரவீந்திரா 106 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 72 ரன்களும், அஜாஸ் படேல் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் எடுத்திருந்தது. தனது 2-வது அரை சதத்தை கடந்த பிரண்டன் கிங் 78 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், ஜாண் கேம்பல் 60 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் சேர்த்தனர். 465 ரன்கள் பின்தங்கியுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
கேம்பல் 45, பிரண்டன் கிங் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரது விக்கெட்டையும் ஜேக்கப் டஃபி கைப்பற்றினார். தொடர்ந்து டெவின் 27 மற்றும் அலிக் அதனீஸ் 45 ரன்களில் ஆகியோர் ஆட்டமிழந்தனர். தற்போது ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ஹோட்ஜ் இணைந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.