

கொல்கத்தா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தியது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் அதிரடி சதம் விளாசினார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீசியது. தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. மார்கோ யான்சன் 55, பிரேவிஸ் 34, ஸ்டப்ஸ் 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா, மெக்கன்ஸி, மேட் ஹென்றி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். நீஷம் மற்றும் ஃபெர்குஸன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது. டாஸ் வென்று தங்கள் திட்டத்துக்கு ஏற்ப பந்து வீசி இருந்தது அந்த அணி.
170 ரன்கள் என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தனர். டிம் செய்ஃபெர்ட், 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரிலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் அதிக ரன்கள் (463) சேர்த்த ஜோடி என்ற சாதனையை ஆலன் மற்றும் செய்ஃபெர்ட் படைத்துள்ளனர். இந்த தொடரில் அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
டிம் செய்ஃபெர்ட் ஆட்டமிழந்த பின்னரும் தனது அதிரடியை ஆலன் தொடர்ந்தார். அதன் பலனாக 33 பந்துகளில் சதம் கண்டார். அது நியூஸிலாந்து அணியின் வெற்றி ரன்களாகவும் இருந்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட சதம் என்று இது அறியப்படுகிறது.
12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. அதன் மூலம் 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா அல்லது இங்கிலாந்து அணியுடன் நியூஸிலாந்து விளையாடும்.