

கிறைஸ்ட்ச் சர்ச்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவிடம் முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் டாம் லாதம் ஆட்டமிழந்தார். இருப்பினும், 2-வது டெஸ்ட் போட்டியில் பும்ராவை எதிர்கொள்ள தனது பேட்டிங் உத்தியில் பெரிய மாற்றம் எதையும் செய்யப்போவதில்லை என்று நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று அதிகாலை தொடங்கியது. முன்னதாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறியதாவது:
ஜஸ்பிரீத் பும்ரா புதிய பந்தில் வீசினாலும், பழைய பந்தில் வீசினாலும் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானவர்தான். அவரது பந்துவீச்சு முறை தனித்துவமானது. மற்ற பந்துவீச்சாளர்களைவிட பேட்ஸ்மேனுக்கு சற்று நெருக்கமாக பந்தை வீசுகிறார். என்னைப் பொறுத்தவரை, என்னை அதிகம் அச்சுறுத்தக்கூடிய பந்தை எதிர்கொள்ளும் வகையில் நான் தயாராக இருப்பதுதான் முக்கியம்.
ஒவ்வொரு வீரருக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ளும் முறை வேறுபடலாம். கவனம் முழுவதையும் ஆட்டத்தில் செலுத்தி, பந்தை உன்னிப்பாகக் கவனித்து எந்தப் பக்கம் ஸ்விங் ஆகிறது என்பதைப் பொறுத்து விளையாட வேண்டும். மோசமான ஆட்டத்துக்குப் பிறகு பேட்டிங்கில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே சில நேரங்களில் கவனச்சிதறலை ஏற்படுத்திவிடும். இதுவரை என்னை இந்த நிலைக்கு அழைத்து வந்தது தெளிவான சிந்தனையும், எனது ஆட்டத்தின் மீதான நம்பிக்கையும்தான்.
தொழில்நுட்ப ரீதியாகவும் எளிமையான அணுகுமுறையையும் பின்பற்ற விரும்புகிறேன். ரன் குவிப்பதற்கு ஏதாவது மாயாஜால வழி கிடைக்குமா என்று தேடுவதில் பயனில்லை. கிரிக்கெட்டில் அப்படி எந்த மந்திரமும் கிடையாது. நியூஸிலாந்து ஆடுகளங்களில் தொடக்க வீரராக விளையாடுவது எப்போதுமே சவாலானது. எவ்வளவுதான் சிறப்பாகத் தயாரானாலும், களத்தில் இறங்கிய பிறகு அதற்கேற்ப முடிவுகள் கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.
கடந்த வாரம் மேற்கொண்ட அதே பயிற்சியைத்தான் இப்போதும் மேற்கொண்டுள்ளேன். ஒவ்வொரு தருணத்திலும் ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தி, அணிக்காக பங்களிப்பைச் சிறப்பாக வழங்குவதே எனது நோக்கம். இவ்வாறு டாம் லாதம் கூறினார்.
வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சில் டாம் லாதம் இரு முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.