‘இந்திய அணி ஹெட் கோச் ஆக நெஹ்ரா தான் வலுவான சாய்ஸ், ஏனெனில்...’ - மஞ்ச்ரேக்கர்

‘இந்திய அணி ஹெட் கோச் ஆக நெஹ்ரா தான் வலுவான சாய்ஸ், ஏனெனில்...’ - மஞ்ச்ரேக்கர்
Updated on
1 min read

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தாலும், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா எதிர்காலத்தில் இந்தியாவின் வெள்ளைப் பந்து (ஒருநாள் மற்றும் டி20) அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வலுவான தேர்வாக இருக்க முடியும் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வரும் நெஹ்ரா, தனது முதல் சீசனிலேயே அணியை சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தார். அதன்பின்னர் நான்கு சீசன்களில் மூன்று முறை பிளேஆஃபுக்கு அழைத்துச் சென்றதுடன், இரண்டு முறை இறுதிப் போட்டிக்கும் வழிநடத்தியுள்ளார்.

ஸ்போர்ட் ஸ்டாரின் இன்சைடு எட்ஜ் போட்காஸ்டில் பேசிய மஞ்ச்ரேக்கர், நெஹ்ராவின் பயிற்சித் திறனை பாராட்டியதோடு, இந்திய அணிக்கான வாய்ப்பையும் சுட்டிக்காட்டினார்.

“இந்தியா ஒரு டி20 பயிற்சியாளரைத் தேடினால், முடிவுகளை நிரூபித்துக் காட்டியவர் இவர்தான். அவருடைய சாதனை அபாரமானது. ஆஷிஷ் நெஹ்ரா முழுக்க முழுக்க கிரிக்கெட் அறிவும், புத்திசாலித்தனமும் கொண்டவர். அவருடன் கிரிக்கெட் பற்றி பேசினால், அவர் உணர்ச்சிவசப்படுபவர் அல்ல. தனது அணியில் உள்ள பிரச்சினைகளை மிகவும் நடைமுறையாகப் பார்த்து தீர்வு காணக் கூடியவர்.

அவர் ஆட்டத்தை மிகத் துல்லியமாக வாசிக்கக் கூடியவர். கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் அதிகம் சிந்திக்க மாட்டார். யாரையாவது மகிழ்விக்க வேண்டும், பதவியைத் தக்கவைத்துக் கொள்ள சில அரசியல் விளையாட்டுகள் ஆட வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லை. அதனால்தான் வீரர்களும் அவரை மதிக்கிறார்கள்.

ஒரு பயிற்சியாளராக கிடைக்கும் வெற்றி, அவரை பாதிப்பதில்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும். வெற்றிக்கான முழு பாராட்டையும் தனக்கே எடுத்துக்கொள்ள அவர் விரும்பமாட்டார். கடின உழைப்பை மிகவும் எளிதாகச் செய்கிற ஓர் எளிமையான மனிதர். அவர் இந்த வேலையை உண்மையாகவே நேசிக்கிறார்.

அவர் பந்துவீச்சுப் பயிற்சியாளராக வரக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் தலைமைப் பயிற்சியாளராக இருந்து, வெவ்வேறு கேப்டன்களின் கீழ் தனது அணியை இவ்வளவு வெற்றிகரமாக வழிநடத்தியவர். அவர் இந்திய அணிக்கு வந்தால், தலைமைப் பயிற்சியாளராகவே வர வேண்டும்” என்று மஞ்ச்ரேக்கர் தெரிவித்தார்.

‘இந்திய அணி ஹெட் கோச் ஆக நெஹ்ரா தான் வலுவான சாய்ஸ், ஏனெனில்...’ - மஞ்ச்ரேக்கர்
“ஐபிஎல் தொடர் முழு​வதும் ஆதிக்கம் செலுத்தியுள்​ளோம்” - ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in