

டென்மார்க் கோபன் ஹேகனில் உள்ள பார்க்கென் ஸ்டேடியத்தில் நடைபெற்ற யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக் குரூப் ஏ4 போட்டியில் வலுவான டென்மார்க் அணியை நார்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
டென்மார்க் அணி 11-வது நிமிடத்தில் ராஸ்மஸ் ஹோய்லண்ட் மூலம் முதல் கோல் அடித்து தொடங்கிய பிறகு 14-ம் நிமிடத்தில் பியர் எமில் ஹோய்பெர்க் மூலம் இன்னொரு கோல் அடித்து முதல் கால் மணி நேரத்திலேயே நார்வேக்கு அதிர்ச்சியளித்தது. இதிலிருந்து நார்வே 37-வது நிமிடத்தில் மீண்டது. காரணம் சூப்பர் ஸ்டார் ஹெர்லிங் ஹாலண்ட்தான் இவர் முதல் கோலை அடிக்க பிறகு 83-ம் நிமிடத்தில் மார்ட்டின் ஓடேகார்ட் ஒரு கோலை அடித்துச் சமன் செய்ய ஆட்டம் விறுவிறுப்புக் கண்டது. கடைசியில் மீண்டும் சூப்பர் ஸ்டார் எர்லிங் ஹாலண்ட் பெனால்டி வாய்ப்பை வெற்றிக்கான கோலாக 96-வது நிமிடத்தில் மாற்றியதில் டென்மார்க் அதிர்ச்சித் தோல்வி கண்டது.
போட்டி 2-2 என்று சமன் ஆன பிறகே கடும் சூடுபிடித்தது. அப்போது 96-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஜோக்கிம் ஆண்டர்சன் பெனால்டி பகுதியில் பந்தைக் கையால் தொட்டது வீடியோ ஆதாரத்தின் வழி வெளிப்பட பெனால்டி கொடுக்கப்பட்டது. ஸ்பாட் கிக்கை எடுத்த எர்லிங் ஹாலண்ட் டென்மார்க் கோல் கீப்பர் மாட்ஸ் ஹெர்மான்செனை வேறுபக்கம் டைவ் அடிக்கச் செய்து பந்தைக் கோலுக்குள் திணித்தார்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஹாலண்ட் கொஞ்சம் ஓவராகப் போய் தன் ஜெர்சியைக் கிழித்தபடி தங்கள் நாட்டு ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு ஒடியதால் மிதமிஞ்சிய கொண்டாட்டத்திற்காக ‘புக்’ செய்யப்பட்டார். ஆனால், இது ஒரு மிகப்பெரிய கம்பேக் வெற்றி. கொண்டாடாமல் எப்படி இருப்பார்? இதன் மூலம் நேஷன்ஸ் லீக் காலிறுதியில் பிரான்ஸ், போர்ச்சுகல், பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியுடன் இணைந்தது நார்வே.
காலிறுதி மார்ச் மாதம் தான் நடைபெறும் இறுதிப் போட்டி ஜூன் மாதம் நடைபெறும்.
எர்லிங் ஹாலண்ட் சாதனைத் துளிகள்
95 நிமிடங்கள் 45 வினாடிகளில் அடிக்கப்பட்ட இந்த கோல், நார்வே அணிக்காக ஹாலண்ட் அடித்த கோல்களில் மிகவும் தாமதமான கோலாகும். மேலும், தனது தேசிய அணிக்காக விளையாடிய 61 போட்டிகளில், அவர் ஒன்றுக்கு மேற்பட்ட கோல்களை அடித்த 20-வது நிகழ்வு இதுவாகும்.
வெறும் 26 வயதே ஆன ஹாலண்ட், தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் 68 கோல்களை அடித்து, நார்வே அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். இதில் கடந்த 13 போட்டிகளில் அவர் அடித்த 12 கோல்களும் அடங்கும்; இதில் சில கோல்கள் கடந்த கோடையில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பையில், நார்வே அணி காலிறுதி வரை முன்னேறிய பயணத்தின் போது அடிக்கப்பட்டவை. அதுமட்டுமின்றி, நேஷன்ஸ் லீக் வரலாற்றிலேயே 25 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரராகவும் அவர் திகழ்கிறார்.