எடை விதியால் இறுதிப்போட்டி வாய்ப்பு இழப்பு: தற்காப்பு கலையில் சுச்சிகாவுக்கு வெண்கலம்

எடை விதியால் இறுதிப்போட்டி வாய்ப்பு இழப்பு: தற்காப்பு கலையில் சுச்சிகாவுக்கு வெண்கலம்
Updated on
2 min read

நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான கலப்பு தற்காப்பு கலை (எம்எம்ஏ) பாரம்பரிய 60 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் நேற்று இந்தியாவின் சுச்சிகா தரியால், சிங்கப்பூரின் ஹுய் ஹூன் தியோவுடன் மோதினார்.

இந்த மோதலில் சுச்சிகாவும், ஹுய் ஹூன் தியோவும் தலா ஒரு சுற்றில் முன்னிலை பெற்றனர். இரு சுற்றுகளுக்குப் பிறகும் நடுவர்களால் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியவில்லை. இதையடுத்து ஒரு நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு வீராங்கனைகளும் தங்களது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் செயல் திறன்களை வெளிப்படுத்தினர்.

இதனால் முதலில் தியோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை இந்திய அணி எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதற்காக 1,000 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தப்பட்டது. புதிதாக 3 நடுவர்கள் சேர்க்கப்பட்டு போட்டி மீண்டும் மதிப்பிடப்பட்டது. அப்போதும் போட்டியின் முடிவு சமனாகவே இருந்தது. இதையடுத்து சர்வதேச எம்எம்ஏ கூட்டமைப்பின் விதிப்படி, போட்டிக்கு முன்னதாக காலையில் நடத்தப்பட்ட எடை பரிசோதனையில் குறைவாக எடை கொண்ட வீராங்கனை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சுச்சிகாவின் எடை 59.2 கிலோவாகவும், தியோவின் எடை 58.5 கிலோவாகவும் இருந்தது. இதனால் 700 கிராம் எடை குறைவாக இருந்த தியோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். சுச்சிகாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டதும் சுச்சிகா மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரை பயிற்சியாளர்கள் சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து சுச்சிகா கூறும்போது, “போட்டியின் முடிவு எனக்கு ஏமாற்றமாக உள்ளது. நான் வெற்றி பெற்றதாகவே நினைத்தேன். இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரு சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடினேன். அவரை கீழே வீழ்த்தினேன். அவர், என்னை வீழ்த்தவே இல்லை. சில குத்துகள் அவரிடம் இருந்து வந்திருக்கலாம். நானும் சரியாக தாக்கினேன். கடைசி நேரத்திலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினேன். இங்கு வருவதற்கு எனது 100 சதவீத உழைப்பையும் கொடுத்துள்ளேன். எனினும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் எம்எம்ஏ பிரிவில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

யார் இந்த சுச்சிகா?

ஹரியாணா மாநிலம் ரோஹ்தக் மாவட்டம் கிளோய் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான சுச்சிகா தரியால், 2024-ம் ஆண்டு ஜியு-ஜிட்சு உலக சாம்பியன் பட்டம் வென்றவர். 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஜூடோவிலும், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் குராஷ் போட்டியிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

12 வயதில் சாலையில் எதிர்கொண்ட பாலியல் தொல்லை சம்பவங்களுக்குப் பிறகு தற்காப்புக் கலைகளில் ஈடுபடத் தொடங்கிய சுச்சிகா, பின்னர் பல்வேறு தற்காப்பு விளையாட்டுகளில் சாதனை படைத்து தற்போது நாட்டை பெருமைப்படுத்தி உள்ளார். எம்.எம்.ஏ. போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கத்தை வென்றிருந்தாலும், சர்ச்சைக்குரிய வகையில் இறுதிச்சுற்று வாய்ப்பு பறிபோனது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

நடுவர்களின் குழப்பமான முடிவு

சுசிச்சிகா - தியோ இடையிலான போட்டி மிகவும் நெருக்கமாக இருந்ததால், இரண்டு நிமிடங்கள் கொண்ட இரண்டு சுற்றுகளும் மூன்று நடுவர்களால் 1-1 எனப் பிரிக்கப்பட்டன. இரண்டு சுற்றுகளிலும் மூவரில் ஒரு நடுவர் இரு வீராங்கனைகளுக்கும் தலா 10 புள்ளிகள் வழங்கினார்.

நிர்ணயிக்கப்பட்ட இரண்டு சுற்றுகளுக்குப் பிறகு, மூன்று நடுவர்களால் ஒரு தீர்ப்புக்கு வர முடியவில்லை. ஒரு நடுவர் இரு வீராங்கனைகளுக்கும் தலா 19 புள்ளிகள் வழங்கினார். ஒருவர் 19-20 என்று தியோவுக்கு ஆதரவாகவும், மற்றொரு நடுவர் சுச்சிகாவுக்கு ஆதரவாக 20-19 என்றும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து போட்டி ஒரு நிமிட கூடுதல் நேரத்துக்கு சென்றது, அதில் தியோ இரண்டு நடுவர்களிடமிருந்து 10 புள்ளிகளைப் பெற்று வெற்றியாளராக வெளிவந்தார். ஆனால் சுச்சிகா மற்றும் தியோ இருவரும் தங்கள் கைகளை உயர்த்தினர்.

எலக்ட்ரானிக் பலகையில் தியோ வெற்றி பெற்றதாக மதிப்பெண் அட்டை காட்டியதும், அதிர்ச்சியடைந்த சுச்சிகா அவநம்பிக்கையுடன் தலையை ஆட்டினார். வெற்றியாளரின் கையை உயர்த்துவதற்காக நடுவர் அவரை அழைத்தார், ஆனால் சுச்சிகா தூரத்திலேயே நின்றார். நடுவர் தியோவின் கைகளை உயர்த்தியதும், சுச்சிகா முழங்கால்களால் கீழே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார். அவரை பயிற்சியாளர்கள் சமாதானப்படுத்தினர்.

எடை விதியால் இறுதிப்போட்டி வாய்ப்பு இழப்பு: தற்காப்பு கலையில் சுச்சிகாவுக்கு வெண்கலம்
சாலையில் சிறுமி துன்புறுத்தல்: பிஹாரில் மூவர் கைதான நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in