

சென்னை: ஹட்சன் பாட்மிண்டன் பயிற்சி மையம் சிவகாசியில் உள்ள திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வருகிறது. உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 300-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இங்கு பயிற்சி பெற்று வரும் ரித்விக் சஞ்சீவி கடந்த மாதம் விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருந்தார். மேலும் இவர் மங்களூர் சர்வதேச சேலஞ்ச் மற்றும் ஓடிசா மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில் ஹட்சன் பாட்மிண்டன் மையத்தில் பயிற்சி பெற்று வரும் வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் மலேசியாவை சேர்ந்த டத்தோ மிஸ்பன் சிடெக் உயர்மட்ட செயல் திறனுக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டத்தோ மிஸ்பன் சிடெக் உலகத் தரவரிசையில் முதலிடம் வகித்த ரஷித் சிடெக், ரோஸ்லின் ஹாஷிம் மற்றும் லீ சோங் வெய் ஆகியோருக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.