

மெஸ்ஸி
பியூனஸ் அயர்ஸ்: தனது கடைசி சர்வதேச கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணிக்காக வரும் அக்.6-ம் தேதி விளையாட உள்ளார் மெஸ்ஸி. இந்தப் போட்டியில் சிறப்பு ஜெர்ஸி அணிந்து அவர் விளையாட உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்திருந்தார். முன்னதாக, கடந்த ஜூலை மாதம் ஸ்பெயின் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்தது. அதுதான் தனது தேசிய அணிக்காக மெஸ்ஸி விளையாடிய கடைசி போட்டி என்று கருதப்பட்டது. அந்த தோல்விக்கு பிறகே அவர் ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில், அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 30-ம் தேதி பொலிவியா அணிக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி புர்கினா ஃபாசோ அணிக்கு எதிராகவும், அக்டோபர் 6-ம் தேதி பெனின் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது அர்ஜெண்டினா கால்பந்து அணி.
இந்த போட்டிகளுக்கான 28 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 39 வயதான லயோனல் மெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், அக்டோபர் 6-ம் தேதி பெனின் அணிக்கு எதிராக பியூனஸ் அயர்ஸில் நடைபெறும் நட்பு ரீதியிலான போட்டியில் கலந்து கொள்வார் எனவும் இந்த போட்டி அவருக்கு பிரியாவிடை வழங்கும் வகையில் அமையும் எனவும் அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
சிறப்பு ஜெர்ஸி
இந்த சூழலில் தனது கடைசி சர்வதேச கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணியின் சிறப்பு ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளார் மெஸ்ஸி. இதை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. ‘ஒன் லாஸ்ட் டைம். வாழ்நாளுக்கான ஜெர்ஸி’ என்று மெஸ்ஸி அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
அர்ஜெண்டினா அணிக்காக சர்வதேச அளவில் 125 கோல்கள் பதிவு செய்துள்ளார் மெஸ்ஸி. அதில் 21 கோல்கள் உலகக் கோப்பை தொடரில் பதிவு செய்தவை. தன் தேசத்துக்காக உலகக் கோப்பை, 2 - கோபா அமெரிக்கா பட்டம், ஒலிம்பிக்கில் தங்கமும் வென்று கொடுத்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர்.