

புளோரிடா: எம்எல்எஸ் கோப்பை தொடரை, லயோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி கால்பந்து கிளப் அணி முதல் முறையாக வென்றுள்ளது. வான்கூவர் ஒயிட் கேப்ஸ் அணி உடனான இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பட்டத்தை தட்டிச் சென்றது இன்டர் மியாமி.
இந்தப் போட்டி புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேல் பகுதியில் உள்ள சேஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டம் தொடங்கிய எட்டாவது நிமிடத்தில் சுய கோல் கொடுத்தது ஒயிட் கேப்ஸ் அணி. இரண்டாவது பாதியில் அந்த அணியின் அலி அகமது பதிவு செய்த கோல் ஆட்டத்தை 1-1 என சமன் செய்தது.
அதன் பின்னர் இரண்டு கோல்களை பதிவு செய்தது இன்டர் மியாமி அணி. எதிரணி வீரர்கள் மெஸ்ஸியை கட்டம் கட்ட, அவரோ சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய உதவினார். 71-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த ரோட்ரிகோ டி பால் கோல் பதிவு செய்ய மெஸ்ஸி உதவினார். தொடர்ந்து கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்ட 90+6 நிமிடத்தில் மேலும் ஒரு கோல் பதிவு செய்ய மெஸ்ஸி உதவினார். டேடியோ அல்லெண்டே அந்த கோலை இன்டர் மியாமி அணிக்காக பதிவு செய்தார். முடிவில் 3-1 கோல் கணக்கில் இன்டர் மியாமி வெற்றி பெற்றது.
கடந்த 2023-ல் இன்டர் மியாமி கிளப் அணியுடன் மெஸ்ஸி இணைந்தார். முன்னதாக, பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜி கிளப் அணிகளில் மெஸ்ஸி விளையாடி உள்ளார். 2022-ல் ஃபிபா உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றது. இந்நிலையில், அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாட்டில் ஃபிபா உலகக் கோப்பை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான அட்டவணை விவரமும் அண்மையில் வெளியானது.
இந்தியாவுக்கு வருகை தரும் மெஸ்ஸி: அடுத்த சில நாட்களில் மெஸ்ஸி இந்தியா வர உள்ளார். ‘GOAT டூர் டூ இந்தியா - 2025’ என அவரது இந்த சுற்றுப்பயணம் அறியப்படுகிறது. ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகருக்கு அவர் பயணிக்கிறார். இந்தியாவின் தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதியை இந்த பயணம் உள்ளடக்கி உள்ளது. இதில் பல்வேறு பிரபலங்களை அவர் சந்திக்க உள்ளார். கண்காட்சி ரீதியான கால்பந்து போட்டியிலும் விளையாட உள்ளதாக தகவல்.