

மான்செஸ்டர்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் மான்செஸ்டர் நகரில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. 159 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மரிசான் காப் 45 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதேவேளையில் அவர், கொடுத்த 2 கேட்ச்களை லாங் ஆன் திசையில் ராதா யாதவ் பிடிக்கத் தவறினார். இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: நடுவில் எங்களுக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் எங்களால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விட்டது. ஸ்ரீ சாரணியும் ஷஃபாலி வர்மாவும் நன்றாகப் பந்து வீசினார்கள், ஆனால் ஃபீல்டர்கள் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த விஷயத்தில் இந்த ஆட்டத்தில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது.
மரிசான் காப் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டார். அவர் எங்களுக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்தார், அவை மிக முக்கியமான தருணங்கள், அவைதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இந்த ஆட்டத்திலிருந்து நிறைய கற்றல்கள் கிடைத்துள்ளன.
நாங்கள் நேர்மறையாக இருக்க வேண்டிய நேரம் இது. மேலும் வரவிருக்கும் போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.