

அஸ்தானா: கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 29 வயதான மனிஷா பான்வாலா மகளிர் 59 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் எலிசபெத் நெட்டேவை எதிர்கொண்ட மனிஷா, போட்டியின் தொடக்கத்தில் 1-6 என்ற கணக்கில் பின்னடைவைச் சந்தித்தார். இருப்பினும், இரண்டாம் பாதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8-6 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இத்தொடரில் 50 கிலோ எடைப் பிரிவில் நீலம் சிரோஹியும், 76 கிலோ எடைப் பிரிவில் காஜல் தோசக்கும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர். இவர்களுக்கு முன்பாக, 2021-ஆம் ஆண்டு அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றதே உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் இந்தியாவின் சிறந்த சாதனையாக இருந்தது. ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவில் 2010-ஆம் ஆண்டு சுஷில் குமார் தங்கம் வென்ற பிறகு, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் மனிஷா பெற்றுள்ளார்.
ஹரியானாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த மனிஷா பான்வாலா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தோல்வியில் இருந்து மீண்டு வந்து இந்த சாதனையைப் படைத்துள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னதாக கனடாவின் லாரன்ஸ் பியூரிகார்ட், மங்கோலியாவின் போலோர்டுயா குரெல்கூ மற்றும் கஜகஸ்தானின் அல்டின் ஷாகயேவா ஆகியோரை வீழ்த்தியிருந்தார் மனிஷா.