‘ஹிட் த பால் ட்வைஸ்’ என்று அவுட் தரப்பட்ட மணிப்பூர் வீரர் - ரஞ்சி டிராபியில் சுவாரஸ்யம்!

‘ஹிட் த பால் ட்வைஸ்’ என்று அவுட் தரப்பட்ட மணிப்பூர் வீரர் -  ரஞ்சி டிராபியில் சுவாரஸ்யம்!
Updated on
2 min read

ரஞ்சி டிராபி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் பிளேட் லெவல் லீக் போட்டி ஒன்றில் மேகாலயா அணியுடன் மணிப்பூர் அணி சூரத்தில் மோதியது. இதில் மணிப்பூர் வீரர் லாமாபம் அஜய் சிங் என்ற வீரர் ஒரே பந்தை இருமுறை பேட்டால் ஆடி ‘டபுள் டச்’ செய்ததாக நடுவரால் அவுட் தீர்ப்பு வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பொதுவாக ‘கல்லி’ கிரிக்கெட்டில்தான் டபுள் டச் என்று அவுட் கொடுப்பார்கள், மற்ற முதல்தர அதிகாரபூர்வ போட்டிகளில் அது அவுட் கிடையாது. விதிமுறைகளிலும் டபுள் டச் அவுட் இல்லை, அதாவது சிலபல சூழ்நிலைகளில் நிபந்தனைகளின் அடிப்படையில்தான் டபுள் டச் அவுட் தரப்படுவது வழக்கம். தெரு கிரிக்கெட்டில் டபுள் டச் என்றாலே அவுட். இப்போது அதிகாரபூர்வ போட்டியில் டபுள் டச் அவுட் என்றால் அதை எப்படி ஏற்க முடியும்? விதிகளுக்குப் புறம்பானது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

நடந்தது என்ன?

ஆரியன் போரா என்ற மேகாலயா பவுலர் வீசிய பந்தை அஜய் சிங் தடுத்தாடினார். ஆனால் பந்து உருண்டு ஸ்டம்பை நோக்கி ஓடியது. அப்போது பேட்டால் மீண்டும் பந்தைத் தடுத்தார். இது வழக்கம்தானே? இது எப்படி அவுட் ஆகும். ஸ்டம்புக்குப் போகும் பந்தை மட்டையை வைத்திருக்கும் கையால் அல்லாமல் மட்டை இல்லாத கையால் தடுத்தால் ஹேண்டில்ட் த பால் அவுட் கொடுக்கலாம்.

மற்றபடி பேட்டர்கள் ஒருமுறை மட்டையில் பட்ட பந்தை மட்டையாலோ, அல்லது காலாலோ ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்தை தடுத்து தன் விக்கெட்டைப் பாதுகாக்கலாமே. இது விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்டதுதான். ஆனால் நடுவர் அவுட் என்றார்.

இதில் வேடிக்கை என்னவெனில் ஒருவர் கூட இது அவுட் இல்லை, தவறான தீர்ப்பு என்று எதிர்ப்புக் காட்டவே இல்லை. பேட்டர் அஜய் சிங்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஒருவேளை கிரிக்கெட் விதிமுறைகள் தெரியாமலே இன்றைய தலைமுறை வீரர்கள் ஆடுகின்றனரோ என்ற சந்தேகத்தை இது எழுப்புகிறது.

வீரர்களுக்கு விதிகள் தெரியாமல் இருப்பதே அபத்தம், அதுவும் நடுவருக்கு விதிமுறை தெரியவில்லை என்றால்? என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே? இந்த அபத்தமான, தவறான அவுட்டைக் கொடுத்தவர் தர்மேஷ் பரத்வாஜ் என்ற நடுவர்தான். மேகாலயா அப்பீல் செய்தவுடன் பேட்டரும் அவுட் என்று கிளம்பிவிட்டார். இது போன்ற அபத்தத்தை எங்காவது பார்த்ததுண்டா?

எம்சிசில் விதி 34.1.1 கூறுவது என்னவெனில், பந்து ப்ளேயில் இருக்கும் போது பந்து பேட்டரின் மட்டையிலோ அல்லது உடலின் வேறு பகுதியிலோ பட்டு இருக்கும் போஹ்டு வேண்டுமென்றே பேட்டர் பந்தை இரண்டாவது முறை அடித்தால் அது அவுட். மற்றபடி தன் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ள மட்டையால் பந்தை இரண்டாம் முறை தடுக்கலாம்” என்றே கூறப்பட்டுள்ளது.

இது முதல் முறை அல்ல, 2005-ல் ஜம்மு காஷ்மீர் அணி கேப்டன் துருவ் மஹாஜன் இதே போன்று ஹிட் த பால் ட்வைஸ் அவுட் தரப்பட்டுள்ளது. ஆந்திரா வீரர் பவன்னா (1963-64), ஜம்மு காஷ்மீரின் ஷாஹித் பர்வேஸ் (1986-87), தமிழக வீரர் ஆனந்த் ஜார்ஜ் (1998-99) ஆகியோரும் இப்படி விநோதமாக அவுட் கொடுக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in