கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த லியோனல் மெஸ்ஸி!

கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த லியோனல் மெஸ்ஸி!
Updated on: 
3 min read

அர்ஜென்டினா அணிக்காக தனது 208-வது மற்றும் கடைசி போட்டியில் களமிறங்கிய லியோனல் மெஸ்ஸி, தனது 126-வது சர்வதேச கோல் மற்றும் 2 உதவிகளுடன் அசத்தி, உணர்ச்சிகரமான முறையில் சர்வதேச கால்பந்து பயணத்துக்கு விடை கொடுத்தார்.

பியூனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மோனுமென்டல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை பெனின் அணிக்கு எதிராக நடைபெற்ற நட்பு ஆட்டம், மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் “கடைசி டாங்கோ” என வர்ணிக்கப்பட்டது. 21 ஆண்டுகளாக அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, 2 கோபா அமெரிக்கா பட்டங்கள் மற்றும் ஒரு உலகக் கோப்பையை வென்ற நிலையில் தனது சர்வதேச பயணத்தை நிறைவு செய்தார்.

இந்தப் போட்டியில் மெஸ்ஸியிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு கோலையாவது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 71-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இடது காலால் அபாரமாக கோலாக மாற்றிய 39 வயதான மெஸ்ஸி, பந்தை வலைக்குள் செலுத்தினார். இதையடுத்து அரங்கமே “மெஸ்ஸி... மெஸ்ஸி...” என்ற முழக்கத்தால் அதிர்ந்தது.

போட்டி முடிந்ததும் ரசிகர்களிடம் பேசிய மெஸ்ஸி, “என்றென்றும் இங்கு திரும்பி வர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனெனில் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடுவது ஒருவருக்கு கிடைக்கக்கூடிய மிக அழகான விஷயம். உண்மையிலேயே இதைவிட அழகானது எதுவும் இல்லை” என்றார்.

போட்டியின் தொடக்கத்தில் மெஸ்ஸிக்கு கிடைத்த சில வாய்ப்புகள் கோலாக மாறாததால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமலேயே அவர் விடைபெறுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கோல் அடிப்பவர் என்பதைக் கடந்து அணியின் ஆட்டத்தை உருவாக்கும் வீரராகவும் மெஸ்ஸி தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

48-வது நிமிடத்தில் கார்னர் மூலம் நிக்கோலஸ் ஓட்டமெண்டி தலையால் கோல் அடிக்க மெஸ்ஸி உதவினார். பின்னர் நிகோ பாஸுக்கு துல்லியமான பாஸ் வழங்கினார். அதை அவர் அற்புதமாக வளைத்து கோலாக மாற்றினார். இதன் மூலம் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் பெனின் அணியை வீழ்த்தியது.

போட்டி முடிந்ததும் மோனுமென்டல் மைதானத்தின் வானில் ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் வானில் ஒளிர்ந்தன. குறிப்பாக 2022-ம் ஆண்டு கத்தாரில் உலகக் கோப்பையை வென்றபோது மெஸ்ஸி கோப்பையைத் தூக்கி நிற்கும் புகழ்பெற்ற காட்சியும் இடம்பெற்றது.

மெஸ்ஸிக்கு பிரியாவிடை கொடுக்க மோனுமென்டல் மைதானம் பொருத்தமான இடமாக அமைந்தது. அர்ஜென்டினா அணிக்காக சர்வதேச அளவில் அதிக கோல்களை அவர் அடித்த மைதானம் இதுவே. இங்கு மெஸ்ஸி 19 கோல்களை அடித்துள்ளார். மேலும், 1986-ம் ஆண்டுக்குப் பிறகு அர்ஜென்டினா தனது முதல் உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து அணி வீரர்களுடன் இம்மைதானத்தில்தான் அவர் ரசிகர்களுடன் கொண்டாடினார்.

“உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் விளையாடிய முதல் போட்டிக்காக இங்கு திரும்பிய நாள் எனது கால்பந்து வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று. அந்த நாளில் நான் கண்ட காட்சியை ஒருபோதும் மறக்க முடியாது. எனக்கு நடந்த மிக அழகான விஷயம் அது” என்று மெஸ்ஸி விதந்தார்.

அவரது இந்த வார்த்தைகள் ரசிகர்கள் மட்டுமின்றி அணியினரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தன.

“இப்போது தவிர்க்க முடியாமல் எனது கால்பந்து வாழ்க்கையின் மிகவும் சோகமான நாளை எதிர்கொள்கிறேன். தேசிய அணிக்கு விடை கொடுக்க வேண்டிய நாள் இது. உங்கள் அனைவரிடமும் விடைபெறுகிறேன். உங்களை நான் மிகவும் தவறவிடுவேன். தேசிய அணியின் சீருடையை அணிந்து விளையாடுவதையும் தவறவிடுவேன். ஆனால் இனிமேல் இந்த வீரர்களுக்கும், அவர்களுக்குப் பிறகு வரும் வீரர்களுக்கும் ஆதரவாக உங்களுடன் நானும் இருப்பேன். எப்போதும்... எப்போதும் ஒன்றாக இருப்போம்” என்று மெஸ்ஸி உருக்கமாக தெரிவித்தார்.

போட்டி தொடங்குவதற்கு முன்பே உணர்ச்சிகரமான சூழல் நிலவியது. அர்ஜென்டினா அணி பேருந்து ரசிகர்கள் கூட்டத்தைக் கடந்து மோனுமென்டல் மைதானத்தை நோக்கிச் சென்றபோது, பேருந்தில் இருந்த மெஸ்ஸி கண்ணீருடன் காணப்பட்டார்.

பின்னர் அர்ஜென்டினா தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும் மெஸ்ஸி மற்றும் தலைமை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி ஆகியோர் கண்ணீர் சிந்தினர். மெஸ்ஸியுடன் அவரது மகன்கள் தியாகோ, மேடியோ மற்றும் சிரோ ஆகியோரும் மைதானத்தில் இருந்தனர்.

போட்டிக்குப் பிறகு மெஸ்ஸி குறித்து பேசிய ஸ்கலோனி, “புதிய வீரர்களைக் கொண்டு நாங்கள் ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியும். ஆனால் என் வாழ்க்கையில் வேறு யாரிடமும் நான் பார்த்திராத ஒரு தனித்துவமான ஒளி மெஸ்ஸியிடம் உள்ளது. அவர் உருவாக்கிய அந்தப் பிரமிப்பு இனி இருக்காது. புதிய பாதையைத் தேட வேண்டியிருக்கும். அவருக்கு பயிற்சியளித்த அனுபவம் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பானது. இப்போது அவர் இல்லாமல் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்றார்.

இந்தப் போட்டி மெஸ்ஸிக்கான பிரியாவிடை நிகழ்வாக மாறியதற்கு மற்றொரு சான்றாக, ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் விளையாட்டு நிறுத்தப்பட்டது. அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற 10-ம் எண் வீரரான மெஸ்ஸிக்கு முழு மைதானமும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தியது. பெனின் வீரர்களும் மாறி மாறி மெஸ்ஸியிடம் சென்று கைகுலுக்கினர்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்திருந்தார். “நேரம் வந்துவிட்டது” என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், மெஸ்ஸிக்கு உரிய பிரியாவிடையை வழங்குவதற்காக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அவரை மீண்டும் ஒரு போட்டியில் விளையாட அழைத்தது. பியூனஸ் அயர்ஸின் மிகப்பெரிய மைதானமான மோனுமென்டலில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கான 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் 90 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. மறுவிற்பனை தளங்களில் சில டிக்கெட்டுகள் 2,500 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக விற்பனையானதாக கூறப்படுகிறது.

1978, 1986 மற்றும் 2022 உலகக் கோப்பைகளை வென்ற அர்ஜென்டினா அணிகளின் வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் மெஸ்ஸிக்கான பிரியாவிடை நிகழ்வில் பங்கேற்றனர்.

“நான் உங்களை நேசிக்கிறேன், உங்களை மிகவும் தவறவிடுவேன் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். அர்ஜென்டினாவைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். உங்கள் அனைவருடனும் இணைந்து இந்தக் கனவை நனவாக்கியதில் பெருமை கொள்கிறேன். மிக்க நன்றி” என்று மெஸ்ஸி ரசிகர்களிடம் கூறினார்.

நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா, தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஜூலை மாதம் நியூஜெர்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்தது.

“கடந்த உலகக் கோப்பை எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் நான் கடந்து வந்த அனைத்தும் மிகவும் கடினமானவை. மீண்டும் உலக சாம்பியனாக வேண்டும் என்பது எனது கனவும், ஒட்டுமொத்த அர்ஜென்டினா நாட்டின் கனவுமாக இருந்தது” என்று மெஸ்ஸி தெரிவித்தார்.

இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தாலும், அந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் செயல்பாடு அபாரமாக இருந்தது. அவர் 8 கோல்கள் அடித்ததுடன் 4 கோல்களுக்கு உதவியும் செய்தார்.

அவரது சிறப்பான பங்களிப்பு காரணமாக, இந்த ஆண்டுக்கான பாலன் டி'ஓர் விருதுக்கான போட்டியிலும் மெஸ்ஸியின் பெயர் மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது. அவருக்குப் பிறகு கால்பந்து உலகின் அடுத்த நட்சத்திரங்களாக கருதப்படும் ஸ்பெயினின் லாமின் யமால் மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே ஆகியோருடன் மெஸ்ஸி போட்டியிடுகிறார்.

பாலன் டி'ஓர் விருதை அதிகபட்சமாக 8 முறை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற சாதனை மெஸ்ஸியிடம் உள்ளது.

அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனைகளுடனும் அவர் சர்வதேச பயணத்தை நிறைவு செய்துள்ளார். ஆண்கள் சர்வதேச கால்பந்து வரலாற்றில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே மெஸ்ஸியைவிட அதிக போட்டிகளில் (234) விளையாடி, அதிக கோல்கள் (146) அடித்துள்ளார்.

உலகக் கோப்பையில் மெஸ்ஸி 21 கோல்கள் அடித்துள்ளார். மேலும், தனது நீண்டகால போட்டியாளரான ரொனால்டோவுடன் இணைந்து சாதனை அளவாக 6 உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்கேற்றுள்ளார். விடை கொடுப்போம்! அயராத கால்களை உடைய கால்பந்து மேதைக்கு!.

கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த லியோனல் மெஸ்ஸி!
இந்திய டி20 அணியில் மீண்டும் புவனேஷ்வர் குமார்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in