“இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை வேண்டும்” - பாக். அரசுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கோரிக்கை

“இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை வேண்டும்” - பாக். அரசுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கோரிக்கை
Updated on
2 min read

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு நியாயமான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் இம்​ரான் கான், தெஹ்ரீக் இ-இன்​சாப் (பிடிஐ) கட்​சி​யைத் தொடங்​கி, 2018 பொதுத் தேர்​தலில் வென்​று, பாகிஸ்தானின் 22-வது பிரதம​ராகப் பதவி​யேற்​றார். கூட்டணிக் கட்​சிகள் வில​கிய​தால், 2022 ஏப்​ரல் மாதம் அவர் பிரதமர் பதவி​யில் இருந்து வில​கி​னார்.

பின்​னர் அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்​டல் என 100-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. சில வழக்​கு​களில் அவருக்கு சிறை தண்​டனை விதிக்கப்பட்டுள்​ளது. தற்​போது அவர் ராவல்​பிண்​டி​யில் உள்ள அடிலா சிறை​யில் அடைக்​கப்​பட்டு உள்​ளார். இந்த சூழலில் இம்​ரான் கானின் வலது கண்​ணில் சிஆர்​விஓ என்ற நோய் பாதிப்பு ஏற்​பட்டுள்​ளது. இதன் ​காரணமாக வலது கண்​ணில் 85 சதவீத பார்வை இழப்பு அவருக்கு ஏற்​பட்​டிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. சிறை அதி​காரி​கள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்​க​வில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்களான கிளைவ் லாயிட், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆலன் பார்டர், கிரேக் சேப்பல், மைக்கேல் ஆதர்டன், மைக்கேல் பிரயர்லி, இயன் சேப்பல், பெலிண்டா கிளார்க், டேவிட் கோவர், கிம் ஹியூக்ஸ், நாசர் ஹுசைன், ஸ்டீவ் வாஹ், ஜான் ரைட் உள்ளிட்ட 14 பேர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“சிறையில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கானின் ஆரோக்கிய நலன் குறித்து அறிந்து பல்வேறு சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்களான நாங்கள் மிகுந்த கவலை அடைந்தோம்.

கிரிக்கெட் விளையாட்டுக்காக அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. பாகிஸ்தான் அணியை 1992 உலகக் கோப்பையில் கேப்டனாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தவர். எல்லைகளை கடந்து அவரது கிரிக்கெட் திறன் பலரையும் ஈர்த்துள்ளது.

எங்களில் பலர் அவருக்கு எதிராக விளையாடி உள்ளோம், அவருடன் விளையாடி உள்ளோம், அல்லது அவரை பார்த்து வளர்ந்து உள்ளோம். கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன், ஆல்ரவுண்டராக இம்ரான் கான் அறியப்படுகிறார்.

கிரிக்கெட்டை கடந்து பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் சேவையாற்றி உள்ளார். சவாலான காலத்தில் தனது தேசத்தை அவர் வழிநடத்தினார். அரசியலை கடந்து ஜனநாயக முறைப்படி பிரதமர் பொறுப்புக்கு தேர்வானவர். இந்த சூழலில் அண்மையில் வெளியான அவரது ஆரோக்கிய நலன் குறித்த தகவல் கவலை அளிக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார்.

சிறையில் உள்ள அவருக்கு உரிய சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும். நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பிரதமர் என்ற முறையில் அவர் நடத்தப்பட வேண்டும். அவருக்கு தாமதமின்றி சட்ட ரீதியான உதவி கிடைக்க வேண்டும். இதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும் என கோருகிறோம்.

நாங்கள் களத்தில் வெவ்வேறு அணிகளுக்காக நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்தவர்கள். ஆனால், ஆட்டம் முடிந்த பிறகு பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் மரியாதையை பகிர்பவர்கள். இந்த கோரிக்கை விளையாட்டு வீரர்கள் என்ற முறையிலும், மனிதத்தின் அடிப்படையிலும் முன்வைக்கிறோம்” என அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை வேண்டும்” - பாக். அரசுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கோரிக்கை
“இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” - கேரளாவை சேர்ந்த சயீத் இப்ராஹீம் கலீல் அல் புகாரி நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in