அசாம் கிரிக்கெட் சங்க அகாடமியில் ஸ்பின் பயிற்சியாளர் ஆனார் எல்.சிவராமகிருஷ்ணன்

அசாம் கிரிக்கெட் சங்க அகாடமியில் ஸ்பின் பயிற்சியாளர் ஆனார் எல்.சிவராமகிருஷ்ணன்
Updated on: 
2 min read

முன்னாள் இந்திய லெக்ஸ்பின்னர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன் ஏசிஏ அகாடமியில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நவம்பர் 2026 முதல் ஓராண்டுக்கு அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார். வடக்கு கவுகாத்தியின் ஃபுலுங்கில் அமைந்துள்ள ACA கிரிக்கெட் அகாடமியில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற உள்ள அவர், இளம் மற்றும் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர்களுக்காக கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தை நடத்த உள்ளார்.

1965-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் பிறந்த சிவராமகிருஷ்ணன், சிறுவயதிலேயே கிரிக்கெட்டில் தனக்கென முத்திரை பதித்தவர். 12 வயதிலேயே பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 7 விக்கெட்டுகளை வெறும் 2 ரன்களுக்கு வீழ்த்தி கவனம் பெற்றார். 1981-82 ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமானபோது, டெல்லிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை 28 ரன்களுக்கு வீழ்த்தினார். அந்த அபார லெக் ஸ்பின் வீச்சு அவரை தேசிய அளவில் கவனிக்க வைத்தது.

அதன் பின்னர், வெறும் 17 வயது மற்றும் 118 நாட்களில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்திருந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அந்த முதல் டெஸ்டில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

1984-85-ல் இங்கிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த அத்தியாயங்களில் ஒன்றாக அமைந்தது. தனது இரண்டாவது டெஸ்டிலேயே இரு இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, மொத்தம் 12 விக்கெட்டுகளை 181 ரன்களுக்கு கைப்பற்றினார். அவரது இந்தச் சிறப்பான பந்துவீச்சின் உதவியுடன் இந்தியா அந்த டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அந்தத் தொடரில் முதல் 3 இன்னிங்ஸ்களில் 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சிவராம கிருஷ்ணன் அதன் பிறகு சோபிக்காமல் போனார். அவரது உயரம் அதிகரித்த படியால் சரியான இடத்தில் பந்தை இறக்க முடியாமல் ஃபுல்டாஸ்களை அதிகம் வீசும்பவுலராக வீழ்ச்சியடைந்தார்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலக சாம்பியன்ஷிப் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வெற்றியிலும் சிவராமகிருஷ்ணன் முக்கியப் பங்கு வகித்தார். சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி அந்தத் தொடரில் பட்டம் வென்றபோது, சிவராமகிருஷ்ணன் தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் இந்தியாவின் வெற்றியில் அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இந்தியாவுக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளும், 16 ஒருநாள் போட்டிகளில் 15 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 முறை 5 விக்கெட் சாதனையும், ஒரு முறை 10 விக்கெட் சாதனையும் படைத்துள்ளார். அவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 6/64 ஆகும்.

உள்நாட்டு கிரிக்கெட்டிலும் தமிழ்நாட்டுக்காக நீண்ட காலம் விளையாடிய அவர், 76 முதல்தர போட்டிகளில் 154 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் 7/28 என்பதே சிறந்த பந்துவீச்சாகும்.

பெரிய அளவில் லெக்-ஸ்பின், கூக்ளி, டாப்-ஸ்பின் ஆகியவற்றை சிறப்பாக வீசிய சிவராமகிருஷ்ணன், கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின்னர் வர்ணனையாளராக புதிய பயணத்தைத் தொடங்கினார். 2000-ம் ஆண்டு இந்தியா–வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் மூலம் வர்ணனை உலகில் அறிமுகமான அவர், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளின் நுட்பங்களை குறிப்பாக சுழற்பந்து வீச்சின் நுணுக்கங்களை விளக்குவதில் தனித்துவமான குரலாக இருந்தார். மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கிரிக்கெட் கமிட்டியில் வீரர்கள் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.

2026 மார்ச் மாதத்தில், பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து விலகுவதாக சிவராமகிருஷ்ணன் அறிவித்திருந்தார். அதன்பின்னர், இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அசாம் கிரிக்கெட் அகாடமியில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதியே அவர் பயிற்சி முகாமில் பங்கேற்று லெக்-ஸ்பின் பந்துவீச்சின் நுணுக்கங்களை இளம் வீரர்களுக்கு எடுத்துரைத்திருந்தார். தற்போது அதே அகாடமியில் அதிகாரப்பூர்வமாக சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள சிவராமகிருஷ்ணன், திறமை, வலுவான மனநிலை மற்றும் முக்கியமாக பேட்ஸ்மேன்களை அச்சமின்றி தாக்கி விக்கெட்டுகளை வீழ்த்தும் துணிச்சல் கொண்ட சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து, உலக அரங்கில் தனது லெக்-ஸ்பின் பந்துவீச்சால் தாக்கத்தை ஏற்படுத்திய சிவராமகிருஷ்ணனின் நீண்ட கிரிக்கெட் அனுபவம், தற்போது அசாமின் இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நேரடி பயிற்சியாக மாறியுள்ளது.

அசாம் கிரிக்கெட் சங்க அகாடமியில் ஸ்பின் பயிற்சியாளர் ஆனார் எல்.சிவராமகிருஷ்ணன்
ஆஸி. ‘ஒயிட் பால்’ கிரிக்கெட் அரசன்: கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு!

X