

கும்பகோணம்: கும்பகோணத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் மாநில அளவிலான போட்டியில் 3 பதக்கங்களை பெற்று, தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.
கும்பகோணம் வட்டம் அரியத்திடலைச் சேர்ந்தவர் சுவாமி நாதன்-யமுனா தம்பதியின் மகன் சுரேந்திரன்(17). அறிவுசார் குறையுடைய மாற்றுத் திறனாளியான இவர், 2022-ம் ஆண்டு முதல் சென்னை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொழிற் கல்வி படித்து வருகிறார்.
மதுரையில் ஆக.31 மற்றும் செப்.1-ம் தேதிகளில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் பாரா தடகள போட்டியில் பங்கேற்று குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுலில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். சுரேந்திரனை, மாநில தடகள சங்கதுணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாக்கோட்டை க.அன்பழகன், பள்ளி தாளாளர் வெங்கடேஷ், தலைமையாசிரியை கனகவல்லி, ஆசிரியை தேவி ஆகியோர் பாராட்டினர்.
இதுதொடர்பாக சுரேந்திரனுக்கு பயிற்சி அளித்த ஆசிரியைகள் கூறும்போது, ‘‘சுரேந்திரன் கடந்த மாதம் தஞ்சாவூரில் நடந்த பாரா தடகள போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற்றார். தொடர்ந்து மதுரையில் நடந்த 2026-மாநில அளவிலான சப் ஜூனியர் பாராதடகள போட்டிகளில், 2 தங்கம், 1 வெள்ளி பதக்கம் பெற்று, தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற் றுள்ளார்’’ என்றனர்.