

அபுதாபி: ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.25.20 கோடிக்கு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
அபுதாபியில் எதிர்வரும் ஐபிஎல் 2026 சீசனுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனுக்கு டிமாண்ட் அதிகம் இருந்தது. அவரை வாங்க கொல்கத்தா அணியுடன் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் ஆர்வம் காட்டின.
கடந்த 2023 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் 2024 சீசனில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் கிரீன் விளையாடி உள்ளார். 2025 ஐபிஎல் சீசனை காயம் காரணமாக அவர் மிஸ் செய்தார்.
எதிர்வரும் சீசனுக்கான ஏலத்தில் அவர் பங்கேற்றார். அவரது பெயர் இந்த ஏலத்தில் தவறுதலாக பேட்ஸ்மேன்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது குறித்து அவரே விளக்கம் தந்திருந்தார். இருப்பினும் பந்து வீச தான் தயார் என அவர் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த ஏலத்தில் ரூ.25.20 கோடிக்கு அவரை ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கொல்கத்தா அணியில் ஆல்ரவுண்டர் ரஸல் இல்லாத நிலையில், கிரீனின் வருகை பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் வெளிநாட்டு வீரர்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக கிரீன் அறியப்படுகிறார். இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராகவும் கிரீன் உள்ளார்.
இருப்பினும் அவருக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுவின் விதியின்படி ரூ.18 கோடி மட்டுமே வழங்கப்படும். மீதமுள்ள தொகை பிசிசிஐ அறக்கட்டளைக்கு செல்லும்.