

லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் அரை இறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங் காங்கின் ஜேசன் குனவானுடன் மோதுகிறார்.
மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபி சந்த் 21-11, 21-15 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஓங் ஜின் யீ, கார்மென் டிங் ஜோடியை தோற்கடித்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜப்பானின் கஹோ ஒசாவா, மை தனபே ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 15-21,10-21 என்ற நேர் செட் கணக்கில் துருக்கியின் நெஷ்லி ஹான் அரினியிடமும், தன்வி சர்மா 17-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹினா அகேச்சியிடமும் தோல்வி அடைந்தனர்.