38 வயதிலேயே ஓய்வு பெற்ற லெக் ஸ்பின்னர் கரண் சர்மா

கரண் சர்மா

கரண் சர்மா

Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடிய லெக் ஸ்பின்னர் கரண் சர்மா சர்வதேச மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரயில்வேஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், சனிக்கிழமை இரவு உத்தரப் பிரதேச டி20 லீக்கில் கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் - மீரட் மேவரிக்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

38 வயதான கரண் சர்மா, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். 2014-ஆம் ஆண்டில் அவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் தொடங்கியது.

“இப்போது நான் ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த எனது குடும்பத்தினர், பிசிசிஐ, ரயில்வேஸ், யுபிசிஏ, ஆந்திரா, விதர்பா கிரிக்கெட் சங்கம் மற்றும் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இனி கிரிக்கெட் தொடர்பான பயிற்சி மற்றும் இதர பொறுப்புகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று கரண் சர்மா தெரிவித்தார்.

2007-08 உள்ளூர் சீசனில் முதல்தர, லிஸ்ட் ஏ மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான கரண் சர்மா, ஆரம்பத்தில் ஆல்ரவுண்டராக உருவானார். ரஞ்சி டிராபியில் அறிமுகமான போட்டியிலேயே சதம் அடித்தார். இருப்பினும், 2012-13 சீசன்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த சீசனில் 3 ரஞ்சி போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், பிசிசிஐயின் சிறந்த 25 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் விருதையும் வென்றார்.

2014 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ரூ.3.75 கோடிக்கு வாங்கியது. அப்போது, ஏலத்தில் விலை போன அதிகபட்ச மதிப்புள்ள கேப் பெறாத இந்திய வீரர் என்ற சாதனையை கரண் சர்மா படைத்தார். அவரது சிறப்பான ஆட்டம் இந்திய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய வெள்ளைப்பந்து அணியில் இடம்பிடித்தார். அந்தத் தொடரில் ஒரு டி20 போட்டியில் விளையாடிய அவர், ஜோ ரூட்டை தனது ஒரே விக்கெட்டாக வீழ்த்தினார்.

அதன்பின்னர் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஒருநாள் அணியிலும் கரண் சர்மா இடம்பெற்றார். ரோஹித் சர்மா 264 ரன்கள் விளாசிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் போட்டியில்தான் கரண் சர்மா அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில் மேலும் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர், இரண்டு போட்டிகளிலும் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை. அதே ஆண்டில் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கோலியின் தலைமையில் அறிமுகமான கரண் சர்மா, இரு இன்னிங்ஸ்களிலும் தலா 2 விக்கெட்டுகள் என மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதுவே அவரது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. 2015-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான வரையறுக்கப்பட்ட ஓவர் அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், காயம் காரணமாக விளையாட முடியவில்லை. அதன்பிறகு இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் கரண் சர்மா 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெவ்வேறு அணிகளில் ஆடியிருந்தார். 2018-ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மூன்று வெவ்வேறு அணிகளுக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தியதே அவரது சிறப்பம்சமாகும். 2016-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2017-ல் மும்பை இந்தியன்ஸ், 2018-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் இணைந்து தொடர்ந்து மூன்று ஐபிஎல் பட்டங்களை வென்றார். 2017-18 உள்ளூர் சீசனில் விதர்பா அணிக்காகவும், 2018-19 சீசனில் ஆந்திரா அணிக்காகவும் விளையாடிய பின்னர் மீண்டும் ரயில்வேஸ் அணிக்கு திரும்பினார்.

கரண் சர்மாவின் கடைசி ஐபிஎல் போட்டி 2025-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அமைந்தது. 2025-26 உள்ளூர் சீசனில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ரயில்வேஸ் அணிக்காக அவர் விளையாடினார். 97 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள கரண் சர்மா, 27.60 என்ற சராசரியில் 270 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 14 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேல் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் 138 முதல்தர இன்னிங்ஸ்களில் 2,866 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்களும் 17 அரைசதங்களும் அடங்கும்.

123 லிஸ்ட் ஏ போட்டிகளில் 153 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 3 முறை 5 விக்கெட் சாதனையையும் பதிவு செய்துள்ளார். 191 டி20 போட்டிகளில் 168 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் ஐபிஎல் தொடரில் 90 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்களையும், டி20 கிரிக்கெட்டில் மேலும் 2 அரைசதங்களையும் கரண் சர்மா எடுத்துள்ளார்.

<div class="paragraphs"><p>கரண் சர்மா</p></div>
சுழற்பந்து வீச்சை கையாளும் விதம்: தேவ்தத் படிக்கல்லின் சூப்பர் டெக்னிக்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in