

துபாய்: இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் நாள் ஆட்டத்தில் 17-வது ஓவரின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் இந்திய தொடக்க பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.
அப்போது அசிதா பெர்னாண்டோ வசைபாட இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதத்தின் இடையே ஜெய்ஸ்வாலின் ஹெல்மெட் அசிதா பெர்னாண்டோவின் நெற்றியில் உரசியது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து தலா 25 சதவிகிதம் அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.