ஜேக்கப் டஃபி அபாரம்: 51 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் படுதோல்வி!

ஜேக்கப் டஃபி அபாரம்: 51 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் படுதோல்வி!
Updated on
2 min read

மவுண்டி மாங்குனியில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 462 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய மே.இ.தீவுகள் தன் இரண்டாவது இன்னிங்சில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைய நியூஸிலாந்து 2-0 என்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

முதல் டெஸ்ட் போட்டியில் 531 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து அட்டகாசமாகத் தடுத்தாடி வரலாறு காணாத டிராவைச் செய்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய மே.இ.தீவுகள் அணி கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்து தொடரை 0-2 என்று இழந்துள்ளது.

43/0 என்று இன்று 5-ம் நாளைத் தொடங்கிய மே.இ.தீவுகள் 87 ரன்கள் வரையிலும் விக்கெட்டை விடாமல் ஆடினார்கள். ஆனால் 87 ரன்களில் தொடங்கிய சரிவு 51 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழக்க நேரிட்டு 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளனர்.

நியூசிலாந்து அணியில் மே.இ.தீவுகளின் பேட்டிங் வரிசையைக் குலைத்தவர் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேகப் டஃபி. இவர் 22.3 ஓவர்களில் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்த, அஜாஜ் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 323 ரன்கள் அபாரக் கூட்டணி அமைத்த கேப்டன் டாம் லேதம் மற்றும் டெவன் கான்வே இரண்டாவது இன்னிங்சிலும் தொடக்கக் கூட்டணியாக 192 ரன்களைக் குவித்தனர்.

டெவன் கான்வே முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் என்பதோடு இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் எடுத்து நியூஸிலாந்துக்கான சாதனை புரிந்தார். டாம் லாதமும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டு, ஒரே டெஸ்ட் போட்டியில் இரு தொடக்க வீரர்களும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமெடுத்த புதிய வரலாற்ருச் சாதனையை நிகழ்த்தினர்.

இதனையடுத்து மே.இ.தீவுகளுக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சரி! முதல் போட்டி போல் நின்று நிதானித்து ஒன்று டிரா செய்வார்கள் அல்லது இலக்கை நோக்கி முன்னேறுவார்கள் என்று நம்பிக்கையுடன் பார்த்தால் அதற்கேற்ப 87 ரன்களைச் சேர்த்தது தொடக்க ஜோடியான பிராண்டன் கிங் (67), ஜான் கேம்பெல் (16), அதன் பிறகு சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தியிருக்கும் சைக்கிளில் ஒரு சைக்கிளை தள்ளிவிட்டால் எல்லா சைக்கிள்களும் சரியுமே அதைப்போன்று மே.இ.தீவுகள் சரிவு கண்டது. ஜேக்கப் டஃபி இந்தத் தொடரில் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ட்ரெண்ட் போல்ட்டின் ஒரே தொடர் அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார்.

இன்று காலை இறங்கியபோது கேம்பெலும், கிங்கும் ஒரு மணி நேரம் தாக்குப் பிடித்தனர். ஆனால் அடுத்த 11 ரன்களுகு 5 விக்கெட்டுகள் காலியானது முதலில் பிராண்டன் கிங் 67 ரன்களில் இருந்த போது டஃபியின் ஷார் பிட்ச் பந்தை தடுத்தாட முயன்று தோல்வி அடைய கிளென் பிலிப்ஸ் ஸ்லிப்பில் கேட்ச் எடுத்தார். அடுத்ததாக அஜாஜ் படேல் தூக்கி வீசிய பந்தை தூக்கி அடிக்கும் முயற்சியில் கேம்பெல் மிட் ஆனில் கிளென் பிலிப்சிடம் கேட்ச் கொடுத்த்து வெளியேறினார்.

ஜேக்கப் டஃபியின் 3 விக்கெட்டுகளுடன் மே.இ.தீவுகள் உணவு இடைவேளையின் போது 99/5 என்று சரிந்தது. டஃபியின் 4வது விக்கெட்டாக கேப்டன் ராஸ்டன் சேஸ் முடிந்தார். முன்னதாக முதல் இன்னிங்ஸ் சத நாயகன் கேவம் ஹாட்ஜ், ஷேய் ஹோப், அலெக் அதான்சே, ஜஸ்டின் கிரேவ்ஸ் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றப்பட்டனர்.

ஜெய்டன் சீல்ஸ் விக்கெட்டை கடைசியாக டஃபி வீழ்த்த, ரோச், ஆண்டர்சன் பிலிப் ஆகியோரை முறையே கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா வீழ்த்த மே.இ.தீவுகள் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தொடரை நியூஸிலாந்து 2-0 என்று கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக டெவன் கான்வே தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக வேகப்பந்து வீச்சாளர் ஜேகப் டஃபி தெர்வு செய்யப்பட்டார்.

ஜேக்கப் டஃபி அபாரம்: 51 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் படுதோல்வி!
தேசிய கால்பந்து போட்டி: புதுச்சேரியை வென்றது தமிழ்நாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in