ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சமீபத்தில் சாதனை தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வணிகத்தில் ‘முதலீட்டுக் குமிழி’ எனும் அபாயம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
‘இன்வெஸ்ட்மெண்ட் பபுள்’ அல்லது ‘முதலீட்டுக் குமிழி’ என்பது பொருளாதார நிபுணர்களால் அபாயகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு இரு பேருதாரணங்களாக அவர்கள் சுட்டிக்காட்டுவது அமெரிக்க 1929 பங்குச் சந்தை சரிவு அதன் பிறகான தி கிரேட் டிப்ரஷன் என்பதற்கு பிரதான காரணம் எனக் கூறப்பட்டதும், அதே போல் 2007-2010-ம் ஆண்டுகளுக்கு இடையே ஏற்பட்ட அமெரிக்க சப் பிரைம் நெருக்கடி, பலரையும் வீடிழக்கச் செய்து ஓட்டாண்டியாக்கியதும்.
இப்போது குறுகிய கால பயன்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் மதிப்பை அதன் சந்தை மதிப்பைக் காட்டிலும் எக்கச்சக்கமாக உயர்த்தி விற்கப்படுவதும் அதில் வெளிநாடு முதலீடுகள் குவிவதும் அத்தகைய ‘முதலீட்டு பபுள்’ அபாயத்தை ஏற்படுத்துமோ என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒப்பந்தங்களில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழில்முனைவோர் தலைமையிலான குழு சுமார் $1.63 பில்லியனுக்கு வாங்கியது. அதேபோல், ஆர்.சி.பி அணியை ஆதித்ய பிர்லா குழுமம், டைம்ஸ் குழுமம் மற்றும் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் இணைந்த கூட்டமைப்பு $1.78 பில்லியனுக்கு கைப்பற்றியது. இவ்விரு அணிகளின் மொத்த மதிப்பு $3.41 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகை பலரையும் ஆச்சரியப்படுத்துவது ஏனெனில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்புதான் குஜராத் டைட்டன்ஸ் அணியை 1 பில்லியன் டாலர்களுக்குக் குறைவான தொகைக்கு வாங்கியது ஒரு குழுமம். ஆனால் இந்த குறுகிய காலக்கட்டத்திற்குள் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் மதிப்பு எப்படி இப்படி கண்டபடி உயர முடியும், என்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் அணிகளின் ஆண்டு வருவாய் ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் பாதிக்கும் மேல் ஒளிபரப்பு உரிமைகளிலிருந்து கிடைக்கிறது, மீதம் ஸ்பான்சர்ஷிப், டிக்கெட் விற்பனை மற்றும் பொருட்கள் மூலம் கிடைக்கின்றன. இப்படியிருக்கையில் அணிகளின் வருவாயை விட அதன் மதிப்பு சுமார் 20 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படுவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
மேலும் ஒளிபரப்பு உரிமைகளே பிரதானமாக வருவாயில் பங்கு வகிக்கும் போது அது உயர வாய்ப்பில்லை மாறாக குறையவே வாய்ப்புள்ளதாக இத்துறை சார்ந்த வர்த்தக நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர். இப்படி செயற்கையாக மதிப்பு அதிகரிக்கப்படுவது நீண்ட காலம் நிலைத்திருக்குமா என்று இவர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.
குறுகிய கால லாப நோக்கில் செய்யப்படும் இத்தகைய பெரும் முதலை முதலீடுகள் விளையாட்டின் நீண்ட கால வளர்ச்சியைப் பாதிக்கக் கூடும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களும் கருதுகின்றனர். நிலைத்தன்மையையும் நீடித்த மெதுவான வளர்ச்சி முறையையும் உத்தரவாதம் செய்ய வேண்டுமே தவிர, திடீர்ப் பெரும் முதலீடுகள் அபாயத்தையே ஏற்படுத்தும் என்று முதலீட்டுத் துறையைச் சார்ந்த ஆலோசகர்கள் பலரும் அச்சம் எழுப்பியுள்ளனர்.