ஐபிஎல் தொடரில் ‘டெத்’ ஓவரில் வீச அஞ்சுகிறாரா ஹர்திக் பாண்டியா?

ஐபிஎல் தொடரில் ‘டெத்’ ஓவரில் வீச அஞ்சுகிறாரா ஹர்திக் பாண்டியா?
Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களை வீச தயக்கம் காட்டி தவிர்ப்பது தெரிகிறது. இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் ஆடும்போது அவ்வாறு இல்லை. ஏன்? ஹர்திக் பாண்டியாவுக்கு என்னவாயிற்று?

நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் 6 இன்னிங்ஸ்களில் வெறும் 97 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட்டும் இந்தியாவுக்கு ஆடும்போது உள்ள ஸ்ட்ரைக் ரேட்டை விடக் குறைவு. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் பவுலிங்கில் 15 ஓவர்கள் வீசி வெறும் 3 விக்கெட்டுகள்தான் எடுத்துள்ளார். ஆனால் இந்தியாவுக்காக இந்த ஆண்டு 12 இன்னிங்ஸ்களில் 286 ரன்களை 165.31 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். 13 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகள் என்று அசத்தியுள்ளார்.

மேலும் முக்கியத் தருணங்களில் ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்காக டெத் ஓவர்களில் வீசி அசத்தியுள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவுகு 16 ரன்கள் தேவைப்பட்ட போது சிறப்பாக வீசி வென்று கொடுத்தார். 2016 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து 2 ஓவர்களில் 39 தேவை என்ற நிலையில் இருந்த போது 19வது ஓவரை மிகச்சிறப்பாக வீசி வெறும் 9 ரன்களையே விட்டுக் கொடுத்தார். இந்த ஓவரினால்தான் இங்கிலாந்து தோற்றது.

மேலும் 2026-இல் இந்தியாவுக்காக ஆடும்போது டி20 போட்டிகளில் இன்னிங்ஸ் முடியும் தறுவாயில் 10 ஓவர்கள் வீசியுள்ளார். 5 விக்கெட்டுகளை 9.7 என்ற சிக்கன விகிதத்தில் கைப்பற்றியுள்ளார் என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரங்கள். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 2 டெத் ஓவர்களையே வீசியுள்ளார். ஒரு விக்கெட்டை வீழ்த்த ஓவருக்கு 13 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார் என்கிறது அதே புள்ளி விவரம்.

அன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக சஞ்சு சாம்சனிடம் செம அடி வாங்கி 2 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்ததால் கடைசி வரை சஞ்சு நின்றதால் ஹர்திக் கடைசி ஓவரைத் தான் வீசாமல் அனுபவமற்ற கிரிஷ் பகத்திடம் கொடுத்தார், சஞ்சு அவரை 16 ரன்கள் விளாசி ஸ்கோரை 207 ரன்களுக்குக் கொண்டு சென்றார். இதில் வேடிக்கை என்னவெனில் பாண்டியாவைப் போலவே கிரிஷ் பகத்தும் முதலில் சஞ்சுவிடம் செமத்தியாக வாங்கினார் என்பதே.

பெரிய தொகை கைமாற குஜராத் டைட்டன்ஸிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு மாறிய பிறகே ஹர்திக் பாண்டியா சரியாக ஆடுவதில்லை என்றே புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணியில் கொஞ்சம் முன்னால் இறங்கி ஆடினார், இப்போது பினிஷிங் ரோல் என்று கூறிக்கொண்டு எதிரணிக்குத்தான் பினிஷ் செய்து கொடுக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ரிஸ்க் எடுத்து கெட்ட பெயர் வாங்க வேண்டாம் என்று ஒதுங்குகிறாரா என்ற ஐயம் எழுகிறது. சஞ்சு சாம்சனுக்கு ஏன் கடைசி ஓவரை வீச வரவில்லை, அனுபவமற்றவருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்பதிலெல்லாம் கடுமையான கணக்கீடுகள் அவருக்கு இருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு ஆடும் போது அவருக்கு அந்தக் கணக்கீடுகள் இல்லை. இது பிரான்ச்சைஸ் கிரிக்கெட் வணிக மதிப்பைத் தக்க வைக்க வேண்டும் போன்ற காரணங்கள் இருக்கலாம்.

ஐபிஎல் தொடரில் ‘டெத்’ ஓவரில் வீச அஞ்சுகிறாரா ஹர்திக் பாண்டியா?
400 ரன்களை விரைந்து எட்டி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி: ஆரஞ்சு தொப்பியை வசமாக்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in