

புதுடெல்லி: ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அகிப் நபி, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி நேரத்தில் காயம் காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா விலகியதால் அகிப் நபிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள அகிப் நபி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
அகிப் நபியின் திறமையை முதலில் கண்டறிந்த பெருமை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான இர்பான் பதானையே சேரும். கடந்த 2018-ம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் அணியின் ஆலோசகராக இருந்த இர்பான் பதான் அணித் தேர்வின் போது அகிப் நபியிடம் உள்ள திறன்களை கண்டறிந்து அவரது செயல்திறனை மேம்படுத்தினார்.
இது தொடர்பாக இர்பான் பதான் கூறியதாவது: பந்தை நகர்த்துவதற்கு ஏற்ற சரியான வேகம் மணிக்கு சுமார் 135 கி.மீ ஆகும். பந்தை ஸ்விங் செய்ய முடிந்து, அதுவும் தாமதமாகத் திருப்ப முடிந்தது என்றால் அவர்தான் சிறந்த பந்துவீச்சாளர். அகிப் நபியின் பந்துவீச்சு முறை மற்றும் அவர், ஓடிவரும் சீரான வேகத்தை வைத்துப் பார்க்கும்போது, அவரால் தொடர்ந்து மணிக்கு 133 முதல் 135 கி.மீ வேகத்தை எட்ட முடியும் என்று நம்புகிறேன்.
முன்னணி பேட்டர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபடும்போதே அவர்களை அவுட் ஆக்கும் திறன் பந்துவீச்சாளரிடம் இருக்க வேண்டும். அதுதான் மற்றொரு முக்கியமான தகுதியாகும். ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு அகிப் நபி தனது பந்துவீச்சால் அழுத்தம் கொடுத்தார். அவருக்கு அந்த நேரத்தில் விக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் கே.எல்.ராகுல் தடுப்பாட்டம் விளையாடிய போது அவுட் ஆனார்.
மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் தற்போதைய முன்னணி வீரர்களுக்கு எதிராக அகிப் நபி பந்துவீசியதை நான் பார்த்தேன். அவர்களையும் அவர், அதே முறையில்தான் அவுட் செய்தார். எனவே, வெவ்வேறு ஆடுகளங்களிலும் உயர்தர பேட்டர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபடும்போது அவுட் ஆகிறார்கள் என்றால், அகிப் நபியிடம் அந்தத் திறன் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
அகிப் நபியை நான் முதன்முதலில் சந்தித்தபோது அவரிடம் நான் கூறியது ஒன்றே ஒன்றுதான். யார் என்ன சொன்னாலும் சரி, உன்னுடைய பந்துவீச்சு முறையை மட்டும் எப்போதும் மாற்றாதே என்று கூறினேன். வேகத்தை அதிகரிக்கச் சொல்லிப் பலரும் பல விஷயங்களைக் கூறுவார்கள். பந்துவீசாத மற்றொரு கையின் அமைப்பைப் பற்றிப் பலரும் பல யோசனைகளைச் சொல்வார்கள்.
ஆனால், உன் பந்துவீச்சு பாணியை மட்டும் மாற்றவே மாற்றாதே என அவரிடம் தெளிவாகக்கூறி உள்ளேன். ஏனெனில் இந்த பந்துவீச்சு முறையில்தான் பந்தின் தையல் பகுதி நேராக விழுகிறது. அவர், தன்னுடைய பாணியை மாற்றினால், அந்த நேரான சீம் அமைப்பு இல்லாமல் போய்விடும். அது நின்றுபோனால், அவரது பந்துவீச்சின் திறமையே முடிவுக்கு வந்துவிடும். இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.