சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. அந்த வகையில் அணியின் உதவி பயிற்சியாளராக ஆல்பி மோர்கல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2010 மற்றும் 2012-ல் அடுத்தடுத்து ஐபிஎல் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டரான ஆல்பி மோர்கல் இடம்பெற்றிருந்தார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட்டில் ஜோகானஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆல்பி மோர்கல் உள்ளார்.
இதே போல சிஎஸ்கே அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா, அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2014, 2015 மற்றும் 2019 சீசனில் சிஎஸ்கே அணிக்காக மோஹித் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து முன்னாள் வீரர் கரேத் பேட்டி, சிஎஸ்கே உதவிப் பயிற்சியாளராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபாஸ்டர் மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் தங்கள் பொறுப்பில் தொடர்வார்கள் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் அறிவிக்கப்பட்டார்.
ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்கிறதா சிஎஸ்கே?
மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முயற்சியில் சிஎஸ்கே ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா உள்ளிட்ட அணிகளும் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய முயற்சித்து வருவதாக தகவல்.
இருப்பினும் இதை எந்தவொரு அணி நிர்வாகமும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. அது நடந்தால் சிஎஸ்கே அணி நிர்வாகம் எந்த வீரரை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.