தோல்விகளில் இருந்து மீண்டு வருமா லக்னோ அணி? - ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் இன்று மோதல்

தோல்விகளில் இருந்து மீண்டு வருமா லக்னோ அணி? - ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் இன்று மோதல்
Updated on
2 min read

லக்னோ: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ​வில் உள்ள ஏகானா கிரிக்​கெட் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ரியான் பராக் தலை​மையி​லான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்விகளுடன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. முதல் 4 ஆட்​டங்​களி​லும் தொடர்ச்சியாக வெற்​றிகளை குவித்த அந்த அணி கடைசியாக விளை​யாடிய 2 ஆட்​டங்​களி​லும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தத் தவறியது.

பேட்​டிங்​கில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், வைபவ் சூர்​ய​வன்ஷி மற்​றும் துருவ் ஜுரெல் ஆகிய முதல் மூன்று வீரர்​களே பலமாக இருந்து வரு​கின்​றனர். இவர்​கள் சோபிக்​கத் தவறும் போதெல்​லாம் அந்த அணி பெரும் போராட்​டத்தை எதிர்​கொள்​கிறது. தோல்வி அடைந்த 2 ஆட்​டங்​களில் ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ராக தொடக்க வீரர்​களான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் ஒரு ரன்​னிலும், வைபவ் சூர்​ய​வன்ஷி ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்து இருந்​தனர்.

ஆனால் கொல்​கத்​தாவுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்த ஜோடி 8 ஓவர்​களில் 81 ரன்​கள் விளாசி​யது. இருப்​பினும் நடு​வரிசை​யில் ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்​ரன் ஹெட்​மயர், டோனோவன் பெரைரா உள்​ளிட்​டோரிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை.

சஞ்சு சாம்​சனின் வெளி​யேற்​றத்​துக்​குப் பிறகு, எதிர்​பா​ராத வித​மாக கேப்​ட​னாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ரியான் பராக், பேட்​டிங்​கில் மிக​வும் மோச​மான காலக்​கட்​டத்தை எதிர்​கொண்​டுள்​ளார். நடப்பு தொடரில் அவர், இது​வரை விளை​யாடிய 6 ஆட்​டங்​களில் 3 முறை ஒற்றை இலக்க ரன்​களில் ஆட்​ட​மிழந்​துள்​ளார். அவரது அதி​கபட்ச ஸ்கோர் 20 மட்​டுமே.

அனுபவ வீர​ரான ரவீந்​திர ஜடேஜா​விடம் இருந்து வெற்​றிக்​கான பங்​களிப்பு வெளிப்​பட​வில்​லை. அதிரடி வீரரான ஷிம்​ரன் ஹெட்​மயர் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி வெறும் 39 ரன்​களே எடுத்​துள்​ளார். இவர்​கள் பார்​முக்கு திரும்​பி​னால் மட்​டுமே அணி​யின் பலம் அதி​கரிக்​கும். பீல்​டிங்​கிலும் ராஜஸ்​தான் அணி முன்​னேற்​றம் காண வேண்​டும்.

கொல்​கத்​தாவுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ரிங்கு சிங் 8 ரன்​னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை நந்த்ரே பர்​கர் தவற​விட்​டார். இதற்​கான பலனை ராஜஸ்​தான் அணி அனுப​வித்​தது. அந்த ஆட்​டத்​தில் ரிங்கு சிங் 53 ரன்​கள் விளாசி ராஜஸ்​தான் அணி​யிடம் இருந்து வெற்​றியை பறித்து இருந்​தார்.

இத்​தகைய பின்​னடைவு​களுக்கு மத்​தி​யிலும், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை விட ராஜஸ்​தான் ராயல்ஸ் பலமான அணி​யாகவே கருதப்​படு​கிறது. ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் தோல்வி அடைந்​துள்ள அந்த அணி வெற்​றிப் பாதைக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

இருப்​பினும் அது அவ்​வளவு எளி​தாக இருக்​காது. ஏனெனில் பஞ்​சாப் கிங்ஸ் அணி​யால் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் பந்​து​வீச்சு வரிசை சிதைக்​கப்​பட்டு இருந்​தது. அந்த ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி 254 ரன்​களை குவித்து மிரட்​டி​யிருந்​தது. பிரியன்ஸ் ஆர்​யா, கூப்​பர் கானொலி ஜோடி 2-வது விக்​கெட்​டுக்கு 13.2 ஓவர்​களில் 182 ரன்​களை வேட்​டை​யாடி இருந்​தது. இவர்​களின் அதிரடி ஆட்​டம் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் பந்​து​வீச்சை நிலைகுலை​யச் செய்​து, கடும் அழுத்​தத்​திற்கு உள்ளாக்கியது.

இதில் பிரின்ஸ் யாதவ் மட்​டுமே நம்​பிக்​கையூட்​டும் ஒளிக்​கீற்​றாகத் திகழ்ந்​தார். அவர், அந்த ஆட்​டத்​தில் 25 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​களை கைப்​பற்​றிருந்​தார். வேகப்​பந்து வீச்​சாளர்​களான ஆவேஷ் கான், முகமது ஷமி ஆகியோர் பந்​தைக் கட்​டுப்​படுத்த முடி​யாமல் திணறி வரு​கின்​றனர். அதே​போல், மணி​மாறன் சித்​தார்த்​தின் பந்​து​வீச்​சிலும் அதிக ரன்​கள் கசிந்​துள்​ளன. எனினும் இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் பலவீன​மான மிடில் ஆர்​டர் பேட்​டிங்கை லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் குறிவைக்​கக்​கூடும். அதே நேரத்​தில், லக்னோ அணி​யின் பேட்​டிங் வரிசை​யும் ஒரு நிலை​யற்ற தன்​மை​யிலேயே காணப்​படு​கிறது.

தங்​களது சிறந்த ஆடும் லெவன் எது என்​ப​தைக் கண்​டறிய அவர்​கள் இன்​னும் போராடிக்​கொண்​டிருக்​கிறார்​கள். கடந்த ஆட்​டத்​தில் மிட்​செல் மார்ஷ் உடன் ஆயுஷ் பதோனியைத் தொடக்க வீர​ராகக் களமிறக்​கும் முடிவு அவர்​களுக்​குப் பலன் அளிக்​க​வில்​லை. மிட்​செல் மார்ஷ் அடுத்​தடுத்து இரண்டு போட்​டிகளில் 40 ரன்​கள் எடுத்​திருந்​தா​லும், சிறந்த தொடக்​கத்தை பெரிய ஸ்கோ​ராக மாற்​றத் தவறி​னார். அதே​போல், கேப்​டன் ரிஷப் பந்த் நிலை​யான ஆட்​டத்தை வெளிப்​படுத்​த​வில்​லை.

நிக்​கோலஸ் பூரன் ஃபார்​மில் இல்​லாமல் இருப்​பது அணி​யின் சிக்​கல்​களை மேலும் அதி​கரித்​துள்​ளது. இக்​கட்​டான சூழலில் இருந்து லக்னோ சூப்​பர் ஜெயண்ட்​ஸ் அணி மீண்டு வர வேண்​டு​மா​னால், அவர்​களது பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்சு ஆகிய இரண்​டு பிரிவு​களும்​ ஒருங்​கிணைந்​து சிறப்​பாகச்​ செயல்​பட வேண்​டியது அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in