

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோஹித் சர்மா, எம்.எஸ்.தோனி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களிலும் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத சிஎஸ்கே அணியின் சீனியர் நட்சத்திரமான தோனி, வான்கடே மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் ‘இம்பாக்ட் பிளேயராக’ களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ஹாட்ரிக் தோல்வியுடன் நடப்பு சீசனை தொடங்கியிருந்த சிஎஸ்கே அணி தற்போது பார்முக்கு திரும்பி ஒரு நிலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றிய தருணத்தில், அதிரடி இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். நடப்பு தொடரில் ஆயுஷ் மாத்ரே 177.88 ஸ்டிரைக் ரேட்டுடன் 201 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆயுஷ் மாத்ரேவின் விலகலால் சிஎஸ்கே அணி மீண்டும் ஒருமுறை தங்களின் பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆயுஷ் மாத்ரே இடத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்டரான உர்வில் படேல் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்த தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே பேட்டர்கள் ஒரு குழுவாக இணைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 90 பந்துகளில் 130 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியது இருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தும் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியது. மிகவும் எளிதாக வெல்ல வேண்டிய அந்த ஆட்டத்தில், மிடில் ஆர்டர் பேட்டர்கள் காட்டிய மந்தமான அணுகுமுறை மற்றும் ரன் சேர்க்கத் தயங்கிய விதம், ஆட்டத்தை அப்படியே ஹைதராபாத் பக்கம் திருப்பியது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் சர்பராஸ் கான் இதுவரை 147 ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு நிலைத்தன்மையுடன் விளையாடி வருகிறார். இருப்பினும், அணியில் முக்கிய பேட்டிங் பொறுப்பில் இருக்கும் அவர், சிறந்த முறையில் கிடைக்கும் தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறி வருவது குறையாகவே உள்ளது. மறுபுறம், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் இதுவரை வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.
இதுபுறம் இருக்க இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் இதே வான்கடே மைதானத்தில்தான் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு அதிரடி ஆட்டம் வெளிப்படக்கூடும்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக அடைந்த 4 தோல்விகளுக்கு கடந்த ஆட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்திருந்தது. குஜராத் அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் திலக் வர்மா 45 பந்துகளில் 101 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
இருப்பினும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் தற்போதைய ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. மும்பை அணியின் தூண்களாகக் கருதப்படும் இவர்களது பங்களிப்பு இந்த சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதேவேளையில் நமன் திர் அந்த இடைவெளியை நிரப்பும் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸை வெளிப்படக்கூடும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தடுமாறி வந்த நிலையில், இளம் வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார், குஜராத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தினார். இந்த ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ராவும் விக்கெட் கைப்பற்றியிருந்தார். அவர், விக்கெட் வீழ்த்தத் தொடங்கியிருப்பது அணிக்கு பலம் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான வில் ஜாக்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். அவரது வருகை மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டையுமே மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.