

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.
இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்த நிலையில் அந்த அணி கடைசியாக தனது சொந்த மைதானத்தில் கம்பீரமாக மீண்டு வந்தது.
அந்த ஆட்டத்தில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரின் வருகை அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் அணியும் சமநிலையை அடைந்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களான ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோருக்குப் பதிலாகக் களமிறக்கப்பட்ட பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் ஆட்டம் தொடங்கியதுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர்.
முதல் மூன்று ஓவர்களுக்குள்ளேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலைக்குச் சரியச் செய்து நடப்பு சீசனில் அந்த அணியின் முதல் தோல்விக்குக் காரணமாக அமைந்தனர். விதர்பாவைச் சேர்ந்த 24 வயதான பிரஃபுல் ஹிங்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்வரிசை வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரல், லுவான்-டிரே பிரிட்டோரியஸ், கேப்டன் ரியான் பராக் ஆகியோரைத் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே வீழ்த்தி அந்த அணியை நிலைகுலையச் செய்தார்.
அவர் தனது 4 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார். பந்தை சரியான லெந்தில் பிட்ச் செய்து, அதிலிருந்து கூடுதல் பவுன்ஸ் வரவழைத்து ராஜஸ்தான் பேட்டர்களை திணறடித்திருந்தார் பிரஃபுல் ஹிங்கே. அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில், இதற்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் கவனிக்கப்படாமல் விடப்பட்ட பிஹாரைச் சேர்ந்த 21 வயதான ஷகிப் ஹுசைனும் அபாரமாகப் பந்துவீசி மிரட்டியிருந்தார்.
நடு ஓவர்களில் மிகவும் சாதுர்யமாக பந்தின் வேகத்தைக் குறைத்தும், திசையை மாற்றியும் வீசிய ஹுசைனும், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் விளைவாக 216 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. இந்த இளம் ஜோடியின் வருகை, நடப்பு சீசனின் தொடக்கத்தில் பின்னடைவாகக் கருதப்பட்ட ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
மேலும், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன் போன்ற அதிரடி பேட்டர்களை மட்டுமே அதிகம் நம்பியிருந்த அந்த அணிக்கு, இவர்களின் எழுச்சி சிறந்த சமநிலையை கொடுத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்த போதிலும் அதில் இருந்து மீண்டு வந்து அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றுள்ளது.
தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. டெல்லி அணிக்கு எதிராக சதம் விளாசிய சஞ்சு சாம்சன், கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 48 ரன்கள் எடுத்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் பார்ம் அணியின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. 5 ஆட்டங்களில் அவர், ஒட்டுமொத்தமாக 12.60 சராசரியுடன் 63 ரன்களே எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 28 ஆக உள்ளது. ரன்கள் சேர்க்க தடுமாறி வரும் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் 3-வது இடத்துக்கு தள்ளப்படக்கூடும்.
அவருக்கு பதிலாக இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. நடப்பு தொடரில் ஆயுஷ் மாத்ரே 5 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 171 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 171 ஆக இருக்கிறது. நடுவரிசையில் சர்ஃபராஸ் கான், டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
பந்துவீச்சில் தொடை பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக கலீல் அகமது விலகியுள்ளார். இது சற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனினும் அவரது இடத்தை முகேஷ் சவுத்ரி அல்லது ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் நிரப்பக்கூடும். கடந்த ஆட்டத்தில் நூர் அகமது சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அவருடன் அகீல் ஹோசைனும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். இந்த சுழல் கூட்டணி ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.