

ஜேக்கப் டஃபி
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. நடப்பு சாம்பியன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இந்த ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த சீசனில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் பின்னர் இறுதிப் போட்டி உட்பட 4 பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றில் விளையாடும். மொத்தம் 13 மைதானங்களில் இந்த சீசன் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 28) முதல் வரும் மே 31 வரை நடைபெறுகிறது. சர்வதேச அளவிலும், உள்ளூர் அளவிலும் விளையாடும் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். வீரர்களின் பயிற்சி, பயணம், பந்து மாற்றம் என சில முக்கிய மாற்றங்கள் இந்த சீசனில் அறிமுகமாகி உள்ளன.
பெங்களூருவில் நடைபெறும் இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் ஜேக்கப் டஃபி, முதல் ஓவரை வீசினார். அவருக்கு இதுதான் முதல் ஐபிஎல் போட்டி. முதல் ஓவரில் 7 ரன்கள் கொடுத்தார் டஃபி. அதற்கடுத்த ஓவரில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து அவர் வீசிய மூன்றாவது ஓவரில் நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கைப்பற்றினார். 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார்.