

அகமதாபாத்: ஐபிஎல் 2026 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது. கடைசி பந்து வரை நீடித்த இந்த ஆட்டத்தில், 211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (55) மற்றும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (31) ஜோடி 70 ரன்கள் சேர்த்து அதிரடித் தொடக்கம் அளித்தது.
நடுவரிசையில் துருவ் ஜுரெல் தனது அதிரடியான ஆட்டத்தால் 42 பந்துகளில் 75 ரன்கள் (5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ரவீந்திர ஜடேஜாவின் கடைசி பந்து பவுண்டரியுடன், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஷுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாதது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அவருக்குப் பதிலாக ரஷீத் கான் அணியை வழிநடத்தினார். கடினமான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் (73 ரன்கள்) தூணாக நின்று அரைசதம் கடந்தார். ஜோஸ் பட்லர் (26) மற்றும் ராகுல் திவேட்டியா (12) ஆகியோரின் விக்கெட்டுகளை ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் வீழ்த்தி ஆட்டத்தைத் திருப்பினார்.
பரபரப்பான கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே வீசிய அந்த ஓவரில் குஜராத் வீரர்களால் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறிப்பாக, கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரன் ஏதும் எடுக்க முடியாமல் போகவே ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. குஜராத் அணிக்கு இது இந்த சீசனில் இரண்டாவது தோல்வியாகும்.