சிஎஸ்கே அணியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி | ஐபிஎல் 2026

சிஎஸ்கே அணியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி | ஐபிஎல் 2026
Updated on
1 min read

லக்னோ: ஐபிஎல் 2026 தொடரின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. 

லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், கார்த்திக் சர்மாவின் அதிரடியான 71 ரன்கள் மற்றும் கடைசி நேரத்தில் சிவம் துபேயின் மின்னல் வேக 32 ரன்கள் உதவியுடன் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைக் குவித்தது. லக்னோ தரப்பில் ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. மிட்செல் மார்ஷ், சிஎஸ்கே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 38 பந்துகளில் 90 ரன்கள் (9 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) விளாசி சதம் அடிக்கும் வாய்ப்பைத் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் மூலம் இழந்தார்.

மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு, களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தனது பாணியில் ஆட்டத்தை முடித்து வைத்தார். அன்ஷுல் கம்போஜ் வீசிய 17-வது ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, 16.4 ஓவர்களிலேயே லக்னோ அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பூரன் 17 பந்துகளில் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தத் தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்குச் சென்னை தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம், லக்னோ அணி இந்தப் பெரிய வெற்றியின் மூலம் தனது பிளே-ஆஃப் கனவைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

சிஎஸ்கே அணியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி | ஐபிஎல் 2026
ரவிமோகனுடன் கெனிஷா பிரேக்-அப்? - சென்னையை விட்டு வெளியேறுவதாக உருக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in