சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஹாட்​ரிக் தோல்வி

43 ரன்​கள் வித்தியாசத்​தில் ஆர்சிபி அணி​யிடம் வீழ்ந்​தது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஹாட்​ரிக் தோல்வி
Updated on
3 min read

பெங்​களூரு: ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கேவுடன் மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

இதனால் ஆர்​சிபி முதலில் பேட் செய்​தது. முதல் ஓவரின் 4-வது பந்​தில் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்​பித்த விராட் கோலி 7 ரன்​கள் எடுத்திருந்த போது மிட் ஆன் திசை​யில் கொடுத்த கேட்ச்சை ஷிவம் துபே தவற​விட்​டார். எனினும் அவர் நீண்ட நேரம் களத்​தில் நிற்​க​வில்​லை. 18 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​கள் எடுத்த நிலை​யில் அன்​ஷுல் கம்​போஜ் பந்​தில் லாங் ஆன் திசை​யில் ஷிவம் துபே​விடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய தேவ்​தத் படிக்​கல், பில் சால்ட்டுடன் இணைந்து அதிரடி​யாக விளை​யாடி​னார். மட்டையை சுழற்​றிய பில் சால்ட் 30 பந்​துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​கள் எடுத்த நிலையில் ஷிவம் துபே பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். 2-வது விக்கெட்​டுக்கு பில் சால்ட், தேவ்​தத் படிக்​கல் ஜோடி 37 பந்துகளில் 56 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து களமிறங்​கிய ரஜத் பட்​டி​தார் சிஎஸ்கே பந்​து வீச்சை வெளுத்து வாங்​கி​னார். ஷிவம் துபே வீசிய 13-வது ஓவரில் 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​கள் உட்பட 23 ரன்​கள் விளாசப்​பட்​டன. அதிரடி​யாக விளை​யாடிய தேவ்​தத் படிக்கல் 29 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஜேமி ஓவர்​டன் பந்​தில் போல்​டா​னார். 3-வது விக்​கெட்​டுக்கு தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்​டி​தார் ஜோடி 21 பந்​துகளில் 58 ரன்​கள் விளாசி​யது.

இதன் பின்​னர் டிம் டேவிட் களமிறங்​கி​னார். கலீல் அகமது வீசிய 16-வது ஓவரில் ரஜத் பட்​டி​தார் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி விளாசி​னார். நூர் அகமது வீசிய 17-வது ஓவரில் டிம் டேவிட் 3 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார். அன்​ஷுல் கம்போஜ் வீசிய அடுத்த ஓவரில் டிம் டேவிட் தலா ஒரு சிக்ஸர், பவுண்​டரி அடித்​தார். ஜேமி ஓவர்​டன் வீசிய 19-வது ஓவரில் 4 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியை விளாசி மிரளச் செய்​தார் டிம் டேவிட்.

அதிரடி​யாக விளை​யாடிய டிம் டேவிட் 21 பந்​துகளில் அரை சதம் அடித்​தார். இந்த ஜோடி​யின் அதிரடி​யால் ஆர்​சிபி அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 250 ரன்​கள் குவித்​தது. டிம் டேவிட் 25 பந்​துகளில், 8 சிக்​ஸர்​கள், 3 பவுண்டரி​களு​டன் 70 ரன்​களும், ரஜத் பட்​டி​தார் 19 பந்துகளில், 6 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 48 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இந்த ஜோடி 4-வது விக்​கெட்​டுக்கு 36 பந்​துகளில் 99 ரன்​கள் விளாசி அசத்தியது.

இதையடுத்து 251 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் 7, சஞ்சு சாம்​சன் 9 ரன்​களில் ஜேக்​கப் டஃபி பந்​தில் ஆட்டமிழந்​தனர். ஆயுஷ் மாத்ரே 1 ரன்​னில் புவனேஷ்வர் பந்​தில் நடையை கட்​டி​னார். 30 ரன்​களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலை​யில் சர்ஃப​ராஸ் கான் அதிரடியாக விளை​யாடி​னார்.

மட்​டையை சுழற்​றிய சர்ஃப​ராஸ் கான் 25 பந்​துகளில், 2 சிக்ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டுன் 50 ரன்​கள் விளாசிய நிலை​யில் கிருணல் பாண்​டியா பந்​தில் ஸ்டெம்​பிங் ஆனார். இதைத் தொடர்ந்து கார்த்​திக் சர்மா 6 ரன்னில் நடையை கட்​டி​னார். நிதான​மாக விளை​யாடிய ஷிவம் துபே 13 பந்​துகளில், 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் அபிநந்தன் சிங் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். 10 ஓவர்​களில் சிஎஸ்கே அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 109 ரன்​கள் எடுத்தது.

7-வது விக்​கெட்​டுக்​கு களமிறங்​கிய ஜேமி ஓவர்​டன்​, பிரசாந்த்​ வீர்​ உடன்​ இணைந்​து அதிரடி​யாக விளையாடினார்​. சிறப்​பாக விளை​யாடி வந்​த பிர​சாந்த்​ வீர்​ 29 பந்​துகளில்​, ஒரு சிக்​ஸர்​, 6 பவுண்​டரி​களு​டன்​ 43 ரன்கள்​ எடுத்​த நிலை​யில்​ புவனேஷ்வர்​ குமார்​ பந்​தில்​ ஆட்ட​மிழந்​தார்​. ஜேமி ஓவர்​டன்​ 16 பந்​துகளில்​, 2 சிக்ஸர்கள்​, 4 பவுண்​டரி​களு​டன்​ 37 ரன்​கள்​ எடுத்​த நிலையில்​ சுயாஷ் சர்​மா பந்​தில்​ வெளி​யேறி​னார்​.

இதையடுத்​து நூர்​ அகமது 8 ரன்​களில்​ ஆட்​ட​மிழந்​தார்​. கடைசி விக்​கெட்​டாக மேட்​ ஹென்​றி 2 ரன்​களில்​ அபிநந்தன்​ சிங்​ பந்​தில்​ வெளி​யேறி​னார்​. முடி​வில்​ சிஎஸ்கே அணி 19.4 ஓவர்​களில்​ 207 ரன்​கள்​ எடுத்​து ஆட்டமிழந்​தது. அன்​ஷுல்​ கம்​போஜ் 19 ரன்​கள்​ சேர்த்து களத்​தில்​ இருந்​தார்​. ஆர்சிபி அணி தரப்பில்​ புவனேஷ்வர்​ குமார்​ 3 விக்​கெட்​கள்​ வீழ்த்​தி​னார்​. ஜேக்​கப்​ டஃபி, அபிநந்தன்​ சிங்​, கிருணல்​ பாண்​டி​யா ஆகியோர்​ தலா 2 விக்​கெட்​கள்​ வீழ்த்​தினர்​.

43 ரன்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​ற ஆர்​சிபி அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன்​ மூலம்​ அந்​த அணி 4 புள்​ளி​களு​டன்​ பட்​டியலில்​ முதலிடத்​துக்​கு முன்னேறியது. சிஎஸ்​கே அணிக்​கு இது ஹாட்​ரிக்​ தோல்வியாக அமைந்​தது. அந்​த அணி முதல்​ ஆட்​டத்​தில்​ 8 விக்​கெட்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ ராஜஸ்​தான்​ ராயல்​ஸ்​ அணியிட​மும்​, 2-வது ஆட்​டத்​தில்​ 5 விக்​கெட்​கள்​ வித்தியாசத்​தில்​ பஞ்​சாப்​ அணி​யிட​மும்​ தோல்​வி அடைந்​திருந்​தது.

சிக்​ஸரில் சாதனை

ஐபிஎல் தொடரில் சிஎஸ்​கேவுக்கு எதி​ராக அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி என்ற சாதனையை ஆர்​சிபி படைத்​தது. நேற்​றைய ஆட்​டத்​தில்​ ஆர்​சிபி 19 சிக்​ஸர்​களை விளாசி​யிருந்​தது. இந்​த வகை​யில்​ இதற்​கு முன்​னர்​ 2018-ல் கொல்​கத்​​தா​வும்​, 2020-ல்​ ​ராஜஸ்​​தான்​ அணி​யும்​ சிஎஸ்​கேவுக்​கு எதி​ராக தலா 17 சிக்​ஸர்​களை அடித்திருந்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஹாட்​ரிக் தோல்வி
ரூ.50 ஆயிரம் செலுத்திய 60 பேருக்கு திருப்பி தர மாட்டோம்: தேர்தலில் போட்டியிடாத மநீம விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in