

படம்: நிர்மல் ஹரிந்திரன்
திருவனந்தபுரம்: இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
இலங்கை அணி, 5 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து எஞ்சிய 3 டி20 போட்டிகளும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகண்டது. இலங்கை அணிக்கெதிராக கடைசியாக நடைபெற்ற 11 டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளது.
இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே, இன்றைய போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீராங்கனைகள் மீண்டும் ஒரு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடும். அதேபோல் பந்துவீச்சிலும் கிராந்தி கவுட், ஸ்னே ராணா, வைஷ்ணவி சர்மா, ஸ்ரீசரணி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் இலங்கை மகளிர் அணி, 3-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சி செய்யக்கூடும். அந்த அணி பேட்டிங்கில் விஷ்மி குணரத்னே, சமாரி அத்தப்பட்டு, ஹசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரமா, கவிஷா தில்ஹரி, நிலாக்சிகா சில்வா ஆகியோரை நம்பியுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சை சிதறடிக்க இலங்கை வீராங்கனைகள் முயற்சிக்கக்கூடும். பந்துவீச்சில் இலங்கை அணி வீராங்கனைகள் மல்கி மடாரா, காவ்யா கவிண்டி, கவிஷா தில்ஹரி ஆகியோர் அபாரமாக பந்து வீசி வருகின்றனர். இவர்கள் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளுக்கு அழுத்தம் தரக்கூடும்.
அணி விவரம்: இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஸ்னே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்தரி ரெட்டி, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்குர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி.கமலினி(விக்கெட் கீப்பர்), ஸ்ரீசரணி, வைஷ்ணவி சர்மா.
இலங்கை: சமாரி அத்தப்பட்டு (கேப்டன்), ஹசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா, நிலாக்சிகா டி சில்வா, கவிஷா தில்ஹரி, இமேஷ் துலானி, கவுஷினி நுத்யன்கனா, மல்ஷா ஷெஹானி, இனோகா ரணவீரா, ஷாசினி கிம்ஹனி, நிமேஷ் மதுஷானி, காவ்யா கவிண்டி, ராஷ்மிகா செவ்வந்தி, மால்கி மடாரா.