

கிரேட்டர் நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உலக குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வந்தது. இதன் கடைசி நாளான நேற்று மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் மீனாக்ஷி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஃபர்சோனா ஃபோசிலோவாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் இத்தாலியின் சிரின் சர்ராபியை தோற்கடித்து தங்கம் வென்றார். 70 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அருந்ததி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அசிசா ஜோகிரோவாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
80+ கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நூர்புர் 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சோடிம்போவாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 50 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐதுமணி சிங் 1-4 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அசில்பெக் ஜலிலோவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
55 கிலோ எடைப் பிரிவில் பவன் பார்த்வால், 65 கிலோ எடைப் பிரிவில் அபினேஷ் ஜாம்வால், 80 கிலோ எடைப் பிரிவில் அங்குஷ் பங்கால் ஆகியோரும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.