

கவ்லூன்: ஹாங்காங் சர்வதேச சிக்ஸ் கிரிக்கெட் தொடர் அந்நாட்டில் உள்ள கவ்லூன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தானுடன் மோதியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 6 ஓவர்களில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷசாங்க் சிங் 11 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசினார். ராகுல் திரிபாதி 9, நிதிஷ் ராணா 19, நடராஜன் 12 ரன்கள் சேர்த்தனர்.
89 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கவாஜா நஃபை 12 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்களும், கேப்டன் அப்பாஸ் அஃப்ரிடி 8 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 13 பந்துகளில் 59 ரன்களை குவித்தது. அப்பாஸ் அப்ரிடி, கிருணல் பாண்டியா வீசிய முதல் ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.