

கட்டாக்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று கட்டாக்கில் நடைபெறுகிறது. டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளதால் தற்போதைய தென் ஆப்பிரிக்க தொடர் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ஆசிய கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா தொடக்க ஓவரை வீசினார். இதன் மூலம் விளையாடும் லெவனில் பல்வேறு சேர்க்கைகளை நாங்கள் பெற முடிந்தது. அவரது அனுபவம், ஐசிசி தொடர் உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்ட விதத்தை பார்த்தாலே தெரியும். அந்த அனுபவம் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஹர்திக் பாண்டியா இருப்பது அணிக்கு நல்ல சமநிலையைக் கொடுக்கும்.
ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில் ஆகியோர் ஆரோக்கியமாகவும், உடற்தகுதியுடனும் உள்ளனர். 2026-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்காக நாங்கள் தயாராவதை எப்போதோ தொடங்கிவிட்டோம்.
2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையை வென்றதில் இருந்து அதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். நாங்கள் தயராகும் விதம் ஒரே மாதிரியானது தான்.
2024-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நாங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டோம். இவை அனைத்துமே எங்களுக்கு பலனை கொடுத்தது.
கடந்த 5 முதல் 6 தொடர்களில் நாங்கள் ஒரே மாதிரியான அணிச்சேர்க்கையுடனே விளையாடி வருகிறோம். அதிக அளவில் மாற்றங்களை மேற்கொள்ளவில்லை. அனைத்தும் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. அதை அப்படியே தொடர நாங்கள் விரும்புகிறோம். சஞ்சு சாம்சன் சில ஆட்டங்களில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்தார்.
இப்போது விஷயம் என்னவென்றால், தொடக்க வீரர்களைத் தவிர, எல்லோரும் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யத் தயாராகவே இருக்கிறார். அணிச் சேர்க்கையை அதிகம் மாற்ற விரும்பவில்லை. விஷயங்கள் நன்றாகவே சென்று கொண்டிருக்கின்றன. அதனால் அதிக அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம்.
செயல் முறையில் கவனம் செலுத்துவோம். ஷிவம் துபே ஆல்-ரவுண்டர். அவரை, ரிங்கு சிங்குடன் ஒப்பிட முடியாது. 3 முதல் 7 வரிசை வரை உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடும் திறன் கொண்டவர்கள்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதுதான் திட்டம். நாங்கள் சரியாகச் செய்யும் சில விஷயங்கள் உள்ளன. எனவே, அதை ஏன் மாற்ற வேண்டும்? இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.