

ராஜ்கோட்: இந்தியா- நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆட்டத்தில் 301 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 6 பந்துகளை மீதம் வைத்து வெற்றியை வசப்படுத்தியிருந்தது. இதனால் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.
முதல் போட்டியில் விராட் கோலி 93 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 56, ஸ்ரேயஸ் ஐயர் 49, கே.எல்.ராகுல் 29, ஹர்ஷித் ராணா 29 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். அநேகமாக வாஷிங்டன் சுந்தர் இடத்தில் நிதிஷ் குமார் களமிறங்கக்கூடும். முதல் போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா பெரிய அளவிலான இன்னிங்ஸை விளையாடுவதில் முனைப்பு காட்டக்கூடும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் வதோதராவில் இந்திய சுழற் பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். எனினும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோரை உள்ளடக்கிய வேகப் பந்து வீச்சு துறை மீண்டும் ஒரு முறை நியூஸிலாந்து பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
நியூஸிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்பட முயற்சிக்கக்கூடும். வதோதரா போட்டியில் டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்த போதிலும் நடுவரிசையில் டேரில் மிட்செல்லை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினர்.
வில் யங், கிளென் பிலிப்ஸ், மிட்செல் ஹே உள்ளிட்டோர் பொறுப்பை உணர்ந்து விளையாடி ரன்கள் குவித்தால் இந்திய அணிக்கு சவால் கொடுக்க முயற்சிக்கலாம். பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் கைல் ஜேமிசன் இறுதிக்கட்ட ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். எனினும் அவருக்கு உறுதுணையாக மற்ற பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படத் தவறினர்.
இதனால் பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் இன்றைய ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பீல்டிங்கிலும் நியூஸிலாந்து அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். ஏனெனில் முதல் போட்டியின் இறுதிக் கட்டத்தில் 2 கேட்ச்களை அந்த அணி தவறவிட்டு இருந்தது.