

ஆக்லாந்து: இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 3-2 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
டி 20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோதுகின்றன. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை 7.30 மணிக்கு ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரை இரு அணிகளுமே 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடருக்காக தயார் செய்துகொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.
டி20 போட்டிகளில் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்த ஈடன் பார்க் ஆடுகளம், ஒருநாள் போட்டியில் மாறுபட்ட தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் பந்துகள் அதிக வேகத்துடனும், நல்ல பவுன்ஸுடனும் எழும்பும். ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்துக்கு அடுத்தபடியாக அதிக பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்களில் ஒன்றாக ஈடன் பார்க் கருதப்படுகிறது.
இந்த மைதானத்தில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராக 2007-ம் ஆண்டு பதிவான 340 ரன்களே நீடிக்கிறது. கடைசியாக இங்கு நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில், முதலில் பேட் செய்த அணிகள் முறையே 150 மற்றும் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளன. இதனால் ஆடுகளத்தில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் வீரர்களின் ஆட்டத்திறனை மதிப்பிட இந்தத் தொடர் உதவும். குறிப்பாக, ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஆட்டம் கவனத்தை ஈர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இவர்களின் செயல்பாடு முக்கியத்துவம் பெறக்கூடும். இவர்களுடன் கேப்டன் ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
பேட்டிங்கில் இந்திய அணி வலுவாக இருக்கும் நிலையில் பந்து வீச்சில் அனுபவம் குறைந்த வீரர்களே இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டித் தொடர் சவாலாக அமையக்கூடும்.டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவில்லை. அதேவேளையில் ஹர்திக் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகியோர் காயத்திலிருந்து மீளவில்லை.
இதனால் முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சுத் துறையில் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் 18 ஒருநாள் போட்டிகளிலும், குர்னூர் பிரார் 9 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளனர். அன்ஷுல் கம்போஜ், அகிப் நபி ஆகியோர் தலா ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இணைந்து 29 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்டுள்ளனர். ஈடன் பார்க் மைதானத்தில் நேராக அமைந்துள்ள எல்லைக்கோட்டின் தூரம் 55 மீட்டர் மட்டுமே. இதனால் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறுவது கடினமே. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி முதல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிறிது பின்னடவை சந்தித்துள்ளது. பயிற்சியின்போது மேட் ஹென்றியுடன் மோதியதில் டெவன் கான்வேவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மூளையதிர்ச்சி பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அவர், முதல் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட் ஹென்றியின் பங்கேற்பும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கெனவே மார்க் சாப்மேன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இதனால் டிம் ஷெய்ஃபெர்ட்டுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
ஆக்லாந்தில் இந்தியா எப்படி?
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வி கண்டிருந்தது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது