

கொழும்பு: இந்தியா யு-19 – இலங்கை யு-19 அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா யு-19 அணி முதல் நாள் ஆட்டத்தில் 65 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது. குஷாக்ரா ஓஜா 103, மனால் சவுகான் 55 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியா யு-19 அணி 105.2 ஓவர்களில் 411 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. மனால் சவுகான் 244 பந்துகளில், ஒரு சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 150 ரன்களும், குஷாக்ரா ஓஜா 193 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
இலங்கை யு-19 அணி தரப்பில் ஜிம்ஹான் மெண்டிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை யு-19 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. திமந்தா மகாவிதனா 24, அவீஷா சமஷ் 9, செனுஜா வெகுனகோடா 5, கேப்டன் விமத் தினசரா 8, கவிஜா கமகே 7, விரான் சாமுதிதா 21, துல்னித் சிகேரா 31, ஜேசன் ஃபெர்னாண்டோ 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சேத்மிகா செனேவிரத்னே 4, ஜிம்ஹான் மெண்டிஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்தியா யு-19 அணி தரப்பில் பிரணவ் ராகவேந்திரா, சிகுருபதி வெங்கடா, ரோஹித் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். காவ்யா பரேஷ் படேல், ஜெகநாதன் ஹேம்சுதேசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 2 விக்கெட்கள் இருக்க 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது இலங்கை யு-19 அணி.