மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்: இந்தியா - தாய்லாந்து இன்று மோதல்

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்: இந்தியா - தாய்லாந்து இன்று மோதல்
Updated on
1 min read

துபாய்: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு தாய்லாந்துடன் மோதுகிறது.

ஆசியக் கோப்பைத் தொடரில் கடந்த பத்தாண்டுகளாக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2016-17-ம் ஆண்டு முதல் டி20 வடிவில் நடைபெற்ற 5 ஆசியக் கோப்பைத் தொடர்களில் இந்தியா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இருப்பினும், அணியின் தற்போதைய செயல்திறன் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடிய 16 சர்வதேச டி20 போட்டிகளில் 9-ல் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சந்தித்த தோல்வியால், இந்திய அணி லீக் சுற்றுடனேயே வெளியேறியது.

இது ஒருபுறம் இருக்க கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் ஃபார்ம் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. மகளிர் டி20 உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் ஏமாற்றமளித்த போதிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் ஹர்மன்பிரீத் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தார். இருப்பினும், பேட்டிங்கில் அவரது நிலையற்ற ஆட்டம் அந்தத் தொடரில் பேசுபொருளானது. மேலும், உயர் தரவரிசையில் உள்ள அணிகளுக்கு எதிராக இந்திய அணி அந்தத் தொடரில் தடுமாறியது.

நம்பகமான பேட்டரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் பிரதிகா ராவல் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், நடுவரிசையில் அதிரடி ஆட்டக்காரருக்கான தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஜோடி தொடக்க பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடும். அதேவேளையில், 3-வது மற்றும் அதற்கு அடுத்தடுத்த வரிசைகளில் வரும் பேட்டர்களுக்கு ஆட்டத்தின் வேகத்தைத் தக்கவைத்து, ஸ்கோரை விரைவாக உயர்த்துவது சவாலாக இருக்கக்கூடும்.

மேலும் அணியின் மோசமான ஃபீல்டிங் சமீபகாலமாக கவலையாக உருவெடுத்துள்ளது. சமீபகால போட்டிகளில் எல்லைக்கோட்டுக்கு அருகில் தொடர்ச்சியாகத் தவறவிடப்பட்ட கேட்ச்கள் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த விஷயத்தில் அணி நிர்வாகம் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

சுழற்பந்து வீச்சை மீண்டும் முன்னின்று வழிநடத்த, மூத்த ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவையே இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. அவருக்கு உறுதுணையாக சரணி, ராதா யாதவ், பிரேமா ராவத் ஆகியோர் செயல்படக்கூடும். வேகப்பந்துவீச்சில் ரேணுகா சிங், கிரந்தி கவுடு, அருந்ததி ரெட்டி, நந்தனி சர்மா ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.

மறுபுறம் ஹாங்காங் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் தாய்லாந்து அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்: இந்தியா - தாய்லாந்து இன்று மோதல்
திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து சீனா முன்னெச்சரிக்கை தகவல் வழங்கவில்லை: நேபாள முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in