ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி
Updated on
2 min read

சனோ: இந்தியா - ஜப்பான் அணிகள் இடையிலான சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஜப்பானின் சனோ மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த ஆட்டம் 5 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்டது. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி, மைதான ஈரப்பதம் காரணமாக சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடுவதில் திணறியது.

அபிஷேக் சர்மா எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சார்லி ஹாரா-ஹின்ஸ் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 9 ரன்களில் நடையை கட்டினார். இதன் பின்னர் இஷான் கிஷன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தாக்குபிடித்து விளையாடிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 12 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் சேர்த்து ஒரு பந்து மீதம் இருக்கையில் அவுட் ஆனார். திலக் வர்மா 3 பந்தில் ஒரு ரன்னும், ஷிவம் துபே ஒரு பந்தை எதிர்கொண்டு ரன் ஏதும் சேர்க்காமலும் ஆட்டமிழக்காமலும் இருந்தனர். முடிவில் 5 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 32 ரன்கள் சேர்த்தது.

33 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜப்பான் அணி 4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. லாக்லான் யமமோட்டோ ஒரு ரன்னில் ரன் அவுட் ஆனார். இப்ராஹிம் தகாஹாஷி 4, கேப்டன் கெண்டல் கடோவாகி-ஃபிளெமிங் 12 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தனர். முன்னதாக ரவி பிஷ்னோய் வீசிய 3-வது ஓவரில் 10 ரன்களை தாரை வார்த்திருந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பெஞ்சமின் இடோ டேவிஸ், ஷிராய் பாட்மோர் ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் அக்சர் படேல் வீசிய கடைசி ஓவரில் ஜப்பான் அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவையாக இருந்தன. இந்த ஓவரில் 2 வைடுகளை சர்ச்சைக்குரிய முறையில் நடுவர் வழங்கினார். இதை எதிர்த்து கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், லெக் திசை நடுவர் கிறிஸ் பிரவினிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஒரு வைடின் முடிவு மாற்றப்பட்டது.

தொடர்ந்து சிறப்பாக வீசிய அக்சர் படேல் தனது அனுபவத்தால் இந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இறுதியில் ஜப்பான் அணி 5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 30 ரன்கள் சேர்த்தது. பெஞ்சமின் இடோ டேவிஸ் 8 பந்துகளில், 9 ரன்களும் ஷிராய் பாட்மோர் 3 பந்துகளில் 2 ரன்களும் சேர்த்தனர். 2 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக ஸ்ரேயஸ் ஐயர் தேர்வானார்.

200-வது வெற்றி

ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் 200-வது வெற்றியாக இது அமைந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் 200 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி
ஆசிய விளையாட்டு: பாட்மிண்டனில் அணிகள் பிரிவில் பதக்கம் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in