

புதுடெல்லி: யோனக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் இன்று (13-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி நடைபெறும் இந்த போட்டி பிடபிள்யூஎஃப் உலக டூர் சூப்பர் தொடரின் 750 புள்ளிகளை கொண்டதாகும். வரும் ஆகஸ்ட் மாதம் இதே மைதானத்தில் பிடபிள்யூஎஃப் உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது. இதனால் தற்போது நடைபெறும் இந்தியா ஓபன் தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
6 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மகளிர் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தென் கொரியாவின் ஆன் சே யங் மற்றும் உலக டூர் ஃபைனல்ஸ் சாம்பியனான பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவ் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 256 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதிகபட்சமாக சீன தைபேவில் இருந்து 36 வீரர், வீராங்கனைகள் இந்தத் தொடரில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் இருந்து பி.வி. சிந்து, மாளவிகா பன்சோத், லக் ஷயா சென், கிடாம்பி காந்த், ஹெச்.எஸ்.பிரனாய், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த், கவிப்பிரியா செல்வம், சிம்ரன் சிங், துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ உள்ளிட்ட 28 வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.
இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.8.56 கோடியாகும். ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் இதே மைதானத்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறுவதற்கான புள்ளிகளை குவிப்பதற்கான வாய்ப்புகளை வீரர், வீராங்கனைகளுக்கு வழங்குகிறது. மேலும் இங்குள்ள சூழ்நிலைகளை வீரர், வீராங்கனைகள் தகவமைத்துக்கொள்ள இந்தத் தொடர் உதவியாக இருக்கக்கூடும். இந்த தொடரை யூரோஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்புசெய்கிறது.