‘ஸ்பின்’னுக்கு எதிராக இந்தியாதான் இப்போது மோசமான பேட்டிங் அணி: அஸ்வின் சாடல்

‘ஸ்பின்’னுக்கு எதிராக  இந்தியாதான் இப்போது மோசமான பேட்டிங் அணி: அஸ்வின் சாடல்
Updated on
2 min read

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சுழற்பந்து வீச்சில் சுழற்பந்து ஜாம்பவான்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்திய அணி மடிந்து ஒயிட்வாஷ் வாங்கியதை அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியாதான் இப்போது ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக மோசமாக பேட் செய்யும் அணியாக உள்ளது என்று சாடியுள்ளார்.

அவர் தனது ‘அஷ் கி பாத்’ யூடியூப் சேனலில் கூறியது: “உண்மையில் இது அதிர்ச்சியளிக்கும் பேட்டிங் செயல்பாடாகும். நம்மிடம் உள்ள வீரர்கள் ஸ்வீப் ஷாட்களை ஆட முயற்சிப்பதில்லை என்று நான் கடந்த 3-4 ஆண்டுகளாகக் கூறிவருகிறேன். நியூஸிலாந்துடன் நாம் தோற்ற தொடரில் பார்த்தேன். அவர்களின் ஸ்வீப் ஷாட்கள் தான் அவர்களது தடுப்பு உத்தியாகவே இருந்தது. அவர்கள் வெறுமனே தடுத்தாடவில்லை. ஸ்வீப்தான் அவர்களது தடுப்பு உத்தி.

2 பந்துகளை அவர்கள் எதிர்கொள்ளும்போது ஒன்றைத் தடுக்கின்றனர், இன்னொன்றை ஸ்வீப் அல்லது ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகின்றனர். அவர்கள் நிறைய இதற்காக பயிற்சி எடுக்கின்றனர். அதில் சிறந்து விளங்குகின்றனர்.

இதனை எதிர்கொள்ளும் ஒரு ஸ்பின்னருக்கு ஸ்கோர்போர்டில் ரன்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். 250-260 ரன்கள் நம்மிடம் இருக்கும்போது எதிரணியின் ஸ்வீப் ஷாட்களை நாம் விக்கெட்டுகள் மூலம் தடுக்க முடியும்.

அப்படியில்லாமல் 140, 150, 160 ரன்களில் ஆல் அவுட் ஆனால் ஆட்டத்தில் பின்னடைவைச் சந்திப்போம். ஆட்டத்தை மீண்டும் நம் பக்கம் கொண்டு வர போராட வேண்டும். நான் மோசமான பேட்டிங் என்று ஏன் கூறுகிறேன் என்றால், தடுப்பாட்டத்தை நம்பி ஆடவில்லை என்பதே. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவறான தடுப்பாட்டத்தில் ஆட்டமிழந்தார். ஆனால், இந்தத் தொடரில் அவர் 400 பந்துகளை ஆடியுள்ளார்.

அதனால் அவரிடம் மோசமான தடுப்பாட்டம் இருந்தாலும் அவர் அது பரவாயில்லை என்று ஆடுகிறார். அவரிடம் பெரிய தடுப்பாட்ட உத்தி இல்லை. ஆனால் அவருடன் ஒப்பிடும் அளவுக்கு நம்மிடமும் திறமைகள் இல்லை.

ரிஷப் பண்ட் பந்தைத் தடுத்தாடப் போய் கூடுதல் பவுன்சில் எட்ஜ் ஆகி அட்டமிழந்ததைத் தவிர நம்மிடையே நல்ல தடுப்பாட்டம் யாரிடம் இருந்தது? தடுப்பாட்டம் வரவில்லையா ஷாட்கள் ஆடலாம்.

பல வேளைகளில் நாமும் தவறு செய்கிறோம். இந்திய வீரர்கள் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு தூக்கி அடித்து சிக்சர்களை அடித்தால் நாமே என்ன சொல்கிறோம் “ஆகா இப்படித்தான் ஆட வேண்டும். இதுதான் அவரது ஆட்டம்” என்கிறோம். அப்படியில்லை சகோதரா. நீ டிபன்ஸும் ஆட வேண்டும்.

மிகப் பெரிய வீரர்கள் அனைவரும் தங்கள் ஆட்டத்தை பிரமாதமான தடுப்பாட்டத்தின் மூலம்தான் வளர்த்துக் கொண்டுள்ளனர். தனிப்பட்ட வீரர்களின் தோல்வி அல்ல இது. நாம் தடுப்பாட்டப் பிரச்சனையைப் பேசுவதே இல்லை. எனவே, என்ன ஆயிற்று... இப்போது இந்தியாதான் உலகிலேயே ஸ்பின் பந்து வீச்சை மோசமாக ஆடக்கூடிய அணி என்று ஆகிவிட்டது” என்றார்.

‘ஸ்பின்’னுக்கு எதிராக  இந்தியாதான் இப்போது மோசமான பேட்டிங் அணி: அஸ்வின் சாடல்
இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்புகள் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in