

கோப்புப் படம்
புதுடெல்லி: இந்தியா - வங்கதேசம் மகளிர் அணிகள் இடையே நடைபெற இருந்த ஒருநாள் போட்டி மற்றும் டி 20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொல்கத்தா, கட்டாக்கில் போட்டிகளை நடத்த ஏற்பாடு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. டிசம்பரில் மாற்றுத் தொடரை நடத்த முயற்சித்து வருகிறோம் எனவும் வங்கதேச தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாது எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “தொடர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பிசிசிஐ-யிடமிருந்து எங்களுக்கு கடிதம் வந்துள்ளது. புதிய தேதிக்காக காத்திருக்கிறோம்” என்றனர். கடந்த ஆகஸ்ட்டில் இந்திய ஆடவர் அணி, வங்கதேசம் சென்று விளையாட இருந்த தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.