

லிங்கன்: இந்தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லிங்கன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 113 ரன்களும், நியூஸிலாந்து ‘ஏ’ அணி 317 ரன்களும் குவித்தன. 204 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 119 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 488 ரன்கள் குவித்தது.
தேவ்தத் படிக்கல் 199, சாய் சுதர்சன் 91, யாஷ் ரத்தோடு 66 ரன்கள் விளாசினர். வாஷிங்டன் சுந்தர் 51, ஆகாஷ் தீப் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 123.1 ஓவர்களில் 516 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் 52, முகேஷ் சவுத்ரி 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆகாஷ் தீப் 25 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 313 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து ‘ஏ’ அணி 65 ஓவர்களில் 187 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. கர்திஸ் ஹாப்பி 90, ஜெய்டன் லெனாக்ஸ் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
17 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் வானிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியா ‘ஏ’ அணி தரப்பில் அகிப் நபி, தேவ்தத் படிக்கல் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 31-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.