இந்தியாவின் மிகப் பெரிய டெஸ்ட் தோல்வி - ‘சாத்திய’ தென் ஆப்பிரிக்காவின் சாதனை!

இந்தியாவின் மிகப் பெரிய டெஸ்ட் தோல்வி - ‘சாத்திய’ தென் ஆப்பிரிக்காவின் சாதனை!
Updated on
2 min read

குவஹாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இது, இந்திய டெஸ்ட் வரலாற்றின் மிகப் பெரிய தோல்வி ஆகும். மார்க்ரம் 9 கேட்ச்களை இந்த டெஸ்ட் போட்டியில் எடுத்து உலக சாதனை புரிந்தார்.

காலி இருக்கைகள் மத்தியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலிருந்தே தென் ஆப்பிரிக்க அணி ஆதிக்கத்தைத் தொடங்கி எந்தவித தொய்வும் இல்லாமல் முழு ஆதிக்கம் செலுத்தியதைப் பலரும் இப்போதுதான் பார்த்திருப்பார்கள்.

இந்திய அணிக்குச் சாதகமாக ஒரு விநாடி கூட இந்த டெஸ்ட் போட்டியில் இல்லை என்பது கம்பீர் பயிற்சியின் கீழான இந்த இந்திய அணியில் சீரியஸாக ஏதோ பிரச்சினைகள் இருக்கிறது என்பதன் சாட்சியாக இந்த டெஸ்ட் தொடர் திகழ்கிறது.

1999-2000 தொடருக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் 2-0 என்று கிளீன் ஸ்வீப் செய்தது. அப்போதைய சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணி ஒரு பலவீனமான அணி, ஆனால் இந்த இந்திய அணியோ பெரும் பலம் வாய்ந்ததாகப் பெருமை பீற்றிக் கொள்ளப்பட்ட அணியாக இருந்து ஒயிட் வாஷ் வாங்கியுள்ளது.

12 ஆண்டு கால கரையற்ற டெஸ்ட் ரெக்கார்டுகள் இப்போது மறைந்து 12 மாதங்களில் 2-வது சீரிஸ் உதை அதுவும், 5-0 என்று நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிடம் ஒயிட் வாஷ் தோல்வி கண்டுள்ளது.

7 ஆண்டு காலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வனவாசம் சென்ற சைமன் ஹார்மர் பல பெரிய இந்திய ஸ்பின்னர்களெல்லாம் செய்ய முடியாததைச் செய்து விட்டார். 9 விக்கெட்டுகளை 101 ரன்களுக்கு அவர் இந்த டெஸ்ட்டில் கைப்பற்றினார். இந்த இன்னிங்ஸில் 37 ரன்களுக்கு 6 விக்கெட். அதுவும் 8.94 என்ற சராசரி. இதுவரை இந்தியாவில் யாரும் செய்யாதது. 17 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் அவர் கைப்பற்றியுள்ளார்.

மார்க்கோ யான்சென் 10.08 என்ற சராசரியில் 12 விக்கெட்டுகள். மார்க்கோ யான்சென் என்ற கீழ் வரிசை வீரர் பேட்டிங்கில் செய்ததைக் கூட ஒரு இந்திய வீரரும் செய்ய முடியவில்லை என்பதுதான் வேதனை. தென் ஆப்பிரிக்கா தங்களின் உலக டெஸ்ட் சாம்பியன் அந்தஸ்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தது. 12 போட்டிகள் கேப்டன்சியில் தெம்பா பவுமா இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை.

இன்றைய 5-ம் நாளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளாக 12-ஐ தட்டிச் செல்லும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா இறங்கியது. பிட்சில் பந்துகள் தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்குத் திரும்பின எழும்பின. பி.சாய் சுதர்சனும், குல்தீப் யாதவ்வும் அதிர்ஷ்டத்தில் தொடர்ந்தனர். ஒரு நோ-பால் அவுட் மற்றும் ஒரு கேட்சை மார்க்ரம் விட்டது ஏதோ பிறழ்வுதான். ஹார்மர் டைட்டாக வீசியதோடு நல்ல பிளைட் செய்தார்.

நல்ல ஆர்க், லூப் என்று கிளாசிக் ஸ்பின்னராக வீசினார். குல்தீப் தடுத்தாட தடுத்தாட ஒவ்வொரு பீல்டராக பவுமா அருகே கொண்டு வர கடைசியில் பிரஷர் தாங்க முடியாமல் பந்தை நேராக ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார் குல்தீப். இந்த ஆஃப் பிரேக் திரும்பவில்லை நேராகச் சென்றது. அதே ஓவரில் துருவ் ஜுரெலுக்கும் அற்புதமான டிர்ஃப்ட் டெலிவரியை வீச எட்ஜ் ஆகி வெளியேறினார். பண்ட் இறங்கி ஒரு சிக்சர் விளாசினார். ஆனால் அவராலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ஹார்மர் பந்தை அவர் முன்னால் வந்து தடுத்தாட பந்தின் கூடுதல் பவுன்ஸ் மட்டையின் மேல் விளிம்பில் பட்டு மார்க்ரமிடம் கேட்ச் ஆனது. 13 ரன்களில் அவர் பரிதாபமாக வெளியேறினார். பிறகு சாய் சுதர்ஷனுக்கு இன்னொரு கேட்ச் விடப்பட, இவரும் ஜடேஜாவும் தேநீர் இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். இடைவேளை முடிந்து இறங்கியவுடன் ஹார்மர் வீசவில்லை, அவர் முதல் செஷனில் இடைவெளியின்றி வீசியதால் இப்போது செனுரன் முத்துசாமி வந்தார். அவர் வீசிய ஆஃப் வாலி பந்திலும் அவுட் ஆக முடியும் என்பதை நிரூபித்தார் சாய் சுதர்சன். மார்க்ரமுக்கு இன்னொரு கேட்ச்.

இந்த முறை ஹார்மர் அதுவரை விக்கெட்டுகளைச் சாய்த்த முனைக்கு எதிர்முனையில் வீச வந்தார். அடுத்தடுத்து இந்திய அணியின் சிறந்த பேட்டர் வாஷிங்டன் சுந்தரையும் ‘ஆல்ரவுண்டர்’(!) நிதிஷ் ரெட்டியையும் துரிய கதியில் வீட்டுக்கு அனுப்பினார். 90 கிமீ வேக ஆஃப் ஸ்பின்னில் சுந்தர் எட்ஜ் செய்ய மார்க்ரம் தன் 9வது உலக சாதனைக் கேட்சை எடுத்து ரஹானேயின் 8 கேட்ச் சாதனையைக் கடந்தார்.

ரெட்டி ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி வெளியேறினார். ஹார்மர் இந்தியாவில் வெற்றிகரமான பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தியது இந்த விக்கெட்டில்தான். ஜடேஜா அரைசதம் அடித்தார், ஆறுதலான இன்னிங்ஸ், கடைசியில் மகராஜை அடிக்கப் போய் வீழ்ந்தார். சிராஜ் யான்சென் கேட்சிற்கு மகராஜிடம் வெளியேற தென் ஆப்பிரிக்கா வரலாறு படைத்தது. இந்தியா 140 ரன்களுக்குச் சுருண்டது.

2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் 342 ரன்கள் வித்தியாசத் தோல்வியையும் முறியடித்து இந்திய அணி 408 ரன்கள் வித்தியாச சாதனை தோல்வியைச் சந்தித்தது. இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை புரிந்தது.

ஆட்ட நாயகன் மார்க்கோ யான்சென், தொடர் நாயகன் சைமன் ஹார்மர். இந்திய அணி நிர்வாகம் ஆத்ம பரிசோதனைக்குத் தயாராவதற்கு முன் மீடியா, முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், பண்டிதர்கள் விமர்சனங்களுடன் ரசிகர்களின் கோபங்களுக்கும் மீம்களையும் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய டெஸ்ட் தோல்வி - ‘சாத்திய’ தென் ஆப்பிரிக்காவின் சாதனை!
டி20 உலகக் கோப்பை பிப்​.7-ல் தொடக்​கம்: இந்​தியா - பாக். பிப்.15-ல் பலப்​பரீட்சை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in