

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 182 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த அணியில் அணியின் இளம் பேட்ஸ்மேனான 21 வயதான முகுல் சவுத்ரியின் அதிரடி ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
ஒரு கட்டத்தில் லக்னோ அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியிருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவையாக இருந்தன. நெருக்கடியான அந்த நிலையில் முகுல் சவுத்ரி அதிரடியாக விளையாடி 27 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். வைபவ் அரோரா வீசிய 17-வது ஓவரில் முகுல் சவுத்ரி, தோனியை போன்று ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தினார். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகுல் சவுத்ரி ஜெய்ப்பூரில் உள்ள ஆரவல்லி பயிற்சி மையத்தில் ஆரம்பத்தில் ஒரு மிதவேகப் பந்துவீச்சாளராகவே தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் விக்கெட் கீப்பராக இருப்பதற்கு வேறு வீரர் இல்லாததால் விக்கெட் கீப்பராக மாறியுள்ளார். இதன் பின்னர் பயிற்சியாளர்கள் அவரது இயல்பான அதிரடி ஆட்டத் திறமையைக் கண்டறிந்து, பேட்டிங் பக்கம் திசைதிருப்பினர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில், டெல்லி அணிக்கு எதிரான கடைசி ஓவரில் முகுல் சவுத்ரியின் அணிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டன. சாத்தியமே இல்லை என்று தோன்றிய அந்த இலக்கை மிக நெருக்கமாகக் கொண்டு வந்த முகுல் சவுத்ரி, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டத்தை மாற்றினார்.
அந்த அற்புதமான இன்னிங்ஸ்தான் அவரை ஐபிஎல் அணிகளின் பார்வையில் பட வைத்தது. அந்த சிறப்பான ஆட்டத்துக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முகுல் சவுத்ரியை ரூ.2.60 கோடி ஏலத்தில் எடுத்தது. அதில் இருந்து 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது அதைவிடப் பெரியதாக ஐபிஎல் மேடையில் ஒரு சூழல் முகுல் சவுத்ரிக்கு கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமைந்தது.
இது அவருக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் முகுல் சவுத்ரி கூறியதாவது: எனது ஆட்டத்தை எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். அவருக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே, தனக்கு மகன் பிறக்க வேண்டும். அவனை ஒரு கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.
அதேபோல், எம்.எஸ்.தோனி ஆட்டத்தை முடிக்கும் விதத்தை நான் எப்போதும் உன்னிப்பாகக் கவனிப்பேன். நானும் அதே வரிசையில் தான் விளையாடுகிறேன், எனவே அவருக்கும் அதை அர்ப்பணிக்கிறேன். இயற்கையிலேயே எனது உடல்வாகு எனது ஷாட்டுகளில் அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.
எனது மரபணுக்கள் அப்படி அமைந்திருக்கின்றன. அதோடு நான் கடுமையாகவும் பயிற்சி செய்கிறேன். தினமும் சுமார் 100 முதல் 150 சிக்ஸர்களை அடிக்கிறேன். கடந்த ஐந்து-ஆறு மாதங்களாக நான் மேற்கொண்ட தீவிரமான பயிற்சிதான் இப்போது என்னுள் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஹெலிகாப்டர் ஷாட்டை நான் சிறுவயதிலிருந்தே பயிற்சி செய்து வருகிறேன்.
தோனி அந்த ஷாட் வாயிலாக ஆட்டத்தை முடிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர், யார்க்கர் பந்தைக் கூட சிக்ஸராக மாற்றிவிடுவார். அப்படிப்பட்ட ஒரு பந்தை நீங்கள் சிக்ஸருக்கு அனுப்பினால், பந்துவீச்சாளர் அடுத்த பந்தை எப்படி வீசுவது என்று குழப்பம் அடைந்து வேறு எதையாவது செய்ய முயற்சிப்பார். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் என் மீது நம்பிக்கை வைத்தார், அந்த நம்பிக்கையை நான் நிறைவேற்ற விரும்பினேன்.
கொல்கத்தாவுக்கு எதிராக நான் ஒருபோதும் ஆட்டத்தின் முடிவைப் பற்றி யோசிக்கவில்லை, போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்று வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் எப்போதும் அவசரப்பட்டு விளையாடுவேன். ஆனால், கடந்த இரண்டு வருட பயிற்சியின் மூலம், என்னால் எவ்வளவு நேரம் களத்தில் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பதை மனதில் பதித்துக்கொண்டேன்.
போட்டியை நான் இறுதிவரை எடுத்துச் சென்றால், நிச்சயம் வெற்றி பெறுவேன். நம்மை சுற்றி நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும் போது, நான் 5 விநாடிகள் அமைதியாக இருந்து, இரண்டு மூன்று முறை ஆழமாக மூச்சை இழுத்து விட விரும்புவேன்.
பிறகு பந்தை மட்டும் கவனித்து விளையாடுவேன். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் பந்துவீச்சாளர் ஏதேனும் ஒரு பந்தில் நிச்சயம் தவறு செய்வார் என்று எனக்குத் தெரியும், அந்தப் பந்தை நான் சிக்ஸருக்கு விரட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இவ்வாறு முகுல் சவுத்ரி கூறினார்.